மரப்படலக் கண்சவ்வழற்சி

மரப்படலக் கண்சவ்வழற்சி பார்வையைப் பாதிக்கக் கூடியது மட்டும் அல்லாமல் உயிருக்கு ஆபத்து (உ-ம். காற்றுப்பாதையை அடைத்து) விளைவிக்கும் ஆற்றல் கொண்ட நோய் ஆகும். பொதுவாக இமைத்தகட்டு கண்சவ்வில் திரும்பத் திரும்ப இருபக்கமாகத் தோன்றும் நார்செறிந்த மரம் போன்ற உறுதியான போலிப்படலப் புண்கள் இந்நோயின் இயல்பாகும். குறிப்பாகக் குழந்தைப் பருவத்தில் காணப்படும் மண்டலம்சார் பிளாஸ்மினோஜென் குறைபாட்டின் மருத்துவ ரீதியான முக்கிய வெளிப்பாடு இது. ஆண்களைவிட இது பெண்களுக்கு அதிக அளவில் காணப்படுவது போல் தோன்றுகிறது. பிளாஸ்மினோஜென் குறைபாட்டால் புண்காயும் திறன் குறைகிறது. இதன் பாதிப்பைக் கண்சவ்வு போன்ற சளிப் படலங்களில் கண்கூடாகக் காண முடியும். செயலூக்கிகளால் பிளாஸ்மினோஜென் இரத்தத்தில் பிளாஸ்மினாக மாற்றப்படுகிறது. பிளாஸ்மின்  ஒரு செரைன் புரோட்டியேஸ் மற்றும் அது மனித உடல் சுற்றோட்டத்தில்  மேலாதிக்கம் செலுத்தும்   நார்ப்பொருள் முறிவு நொதியாக உள்ளது; மேலும் புறவணு மச்சையாகவும் காணப்படுகிறது. பிளாஸ்மின் குருதிதேக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மட்டுமல்லாமல் அது காயம் ஆறும் செயல் முறையின் ஓர் ஒருங்கிணைந்த கூறாகும் (பைப்ரினை நிலையிறக்கி வினையாற்றுகிறது). பிளாஸ்மினோஜென் குறைபாட்டால் நார்ச்செறிவு படலங்கள் அல்லது சளி இழைகள் சேர்கின்றன. இவை, பைப்ரின் உலர்வதால் கண்சவ்வுப் புண்கள் மரம்போல் உறுதிபெற வழிகோலுகின்றன. சிறிய காயங்கள், அறுவை (குறிப்பாக, இமைமுனைத்திசு வளர்ச்சி அல்லது கண்சவ்வுக்குமிழ் ஆகியவற்றிற்காக செய்யப்படும் அறுவை) அல்லது காய்ச்சல் போன்ற மண்டலம் சார் நிகழ்வு, மற்றும் எதிர்-நார்ப்பொருள்முறிவு சிகிச்சை ஆகியவற்றால் இதன் உருவாக்கம் தூண்டப்படலாம். இத்தகையப் பொறிநுட்பம் பிளாஸ்மினோஜென் குறைபாட்டால் கண்ணுக்கு வெளியேயும் நிகழ்கிறது.

முதன்முதலாக 1847-ல் போயிசான் இருவிழிகளிலும் போலிப் படலக் கண்சவ்வழற்சி கொண்ட ஒருவரைப் பற்றி விவரித்தார் (Bouisson M. Ophthalmic sur-aigue avec formation de pseudo-membranes a la surface de la conjonctive. Ann Ocul, 1847; 17: 100-4). 1933-ல், போலிப் படலங்களின் மரம் போன்ற திண்மையைக் குறிக்க போரல்  “மரப்படலம்” (லிக்னஸ்) என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார் (Borel MG. Un nouveau syndrome palpebral. Bull Soc Fr Ophthalmol 1933; 46: 168-80). எனினும், மரப்படலத்துக்கும் பிளாஸ்மினோஜின் குறைபாட்டுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை 1997-ல் மிங்கர்சும் பிறரும் நிறுவினர் (Mingers AM, Heimburger N, Zeitler P, et al. Homozygous type I plasminogen deficiency. Semin Thromb Hemost 1997; 23:259-69). உடலில் உள்ள பிற சளிப் படலங்களில் இது போன்ற போலிப் படலங்கள் பல நோயாளிகளுக்கு உருவாகின்றன. இந்நோயின் மண்டலம் சார் தன்மையை விவரிக்க மிங்கர்சும் பிறரும்  “போலிப் படல நோய்” என்ற சொல்லைப் பரிந்துரைத்தனர். மருத்துவ இலக்கியத்தில் இப் புண்கள் போலிப் படலமுடைவை (ஒரு போலிப்படலத்தில் தளர்வான பைப்ரின் – செல் சிதைவுக் கசிவுகள் காணப்படும். இவை கீழுள்ள மேல்தோலில் இணைந்திருக்காது. பொதுவாக இரத்தக் கசிவின்றி இவற்றை அகற்றலாம்) என்று குறிப்பிடப்பட்டாலும் இப்புண்கள் உண்மைப் படலங்களே (ஒரு உண்மைப் படலத்தில் ஒரு பைப்ரின் – செல் சிதைவு கீழுள்ள மேல்தோலில் பைப்ரினால் உறுதியாகப் பிணைந்திருக்கும். அகற்ற முற்படும்போது மேல்தோல் பிய்ந்து இரத்தக் கசிவு உண்டாகும்).

மரப்படலம் அரிதானது. இது பரவலாகக் காணப்படுவது உறுதியாக நிறுவப்படவில்லை. குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் பொதுவாக ஏற்படும் இது முதியோருக்கும் உண்டாகலாம்.

சிறிய அளவில் கீழ்க்காணும் பிற உறுப்புகளின் சளி படலத்தில் இது போன்ற படலம் உருவாக மரப்படல கண்சவ்வழற்சி வழிகோலலாம்:

 • வாய்ப் பாதை
 • இரைப்பைக் குடல் வழி
 • மேல் மற்றும் கீழ் மூச்சுக் குழாய்கள் (மூக்குப்புழை, தொண்டை, மூச்சுக்குழல், மூச்சு இணை குழல் மற்றும் நுரையீரல்).
 • காதுகள்.
 • பெண்ணுறுப்புப் பாதை.
 • சிறுநீரக சேமிப்பு மண்டலம்.
 • அரிதாக இதனால் கீழ்வருவன ஏற்படலாம்:
 • சிறுவர் தோல் முண்டு
 • அடைப்பு மண்டை வீக்கம்

கண் பாதிப்பு இல்லாமலேயே கடும் பிளாஸ்மினோஜன் குறைபாட்டால் இந்நோய்ப் பதிப்பு உடலின் பிறபாகங்களில் உருவாவதை பல ஆய்வுகள் வெளிப்படுத்தி உள்ளன.

குறிப்பிடத்தக்க அளவில் பிளாஸ்மினால் நிகழும் மிகைசெல் நார்ப்பொருள்முறிவு குறைவுபடும் பொழுது, காயம் ஆறுதலில், முக்கியமாக காயமடைந்த சளி திசுக்கள், குறைபாடு உண்டாவதாக திசுநோயியல் கண்டுபிடிப்புகள் உணர்த்துகின்றன.

அகற்றினாலும் மரப்படலம் திரும்பத் திரும்பத் தோன்றும். பிளாஸ்மினோஜனை மேற்பூச்சாகவும் மண்டலம் சார்ந்ததாகவும் இணைத்துப் பயன்படுத்துவதில் மேலாண்மை அடங்கி உள்ளது.

குறிப்புகள்:

http://www.ijo.in/article.asp?issn=0301-4738;year=2012;volume=60;issue=6;spage=563;epage=566;aulast=Tok

https://www.hemophilia.org/sites/default/files/document/files/PlasminogenDeficiency.pdf

HollandEdward J, Mannis Mark J, Lee W Barry. Ocular Surface Disease - Cornea,Conjunctiva and Tear Film. Elsevier Saunders. 2013. P. 183-188.

Bowling Brad. Kanski's Clinical Ophthalmology - A Systematic Approach. Eighth Edition. Elsevier. 2016. P.160.

Yanoff Myron, Sassani Joseph W. Ocular Pathology. Elsevier Saunders. Seventh Edition. 2015. P. 203.

http://ijbamr.com/pdf/December%202014%20392-396.pdf.pdf

http://europepmc.org/articles/PMC4463565

http://www.joponline.org/doi/abs/10.1902/cap.2012.110060?journalCode=cap

http://eyewiki.aao.org/Ligneous_Conjunctivitis

http://www.ncbi.nlm.nih.gov/pubmed/12850227

http://www.ncbi.nlm.nih.gov/pubmed/11931777

http://bjo.bmj.com/content/53/6/373.full.pdf

Shields Jerry A, Shields Carol L. Eyelid, Conjunctival, and Orbital Tumors – An Atlas and Textbook. Lippincott Williams & Wilkins, a Wolters Kluwer business. Second Edition. 2012. P. 418.

Bouisson M. Ophthalmic sur-aigue avec formation de pseudomembranes a la surface de la conjonctive. Ann Ocul 1847; 17: 100-4.

Borel MG. Un nouveau syndrome palpebral. Bull Soc Fr Ophthalmol 1933; 46: 168-80.

Barabino S, Rolando M. Amniotic membrane transplantation in a case of ligneous conjunctivitis. Am J Ophthalmol 2004; 137: 752-753.

Mingers AM, Heimburger N, Zeitler P, et al. Homozygous type I plasminogen deficiency. Semin Thromb Hemost 1997; 23:259-69.

Melikian H E. Treatment of ligneous conjunctivitis. Ann Ophthalmol 1985; 17: 763-65.

Schuster V, Seregard S. Ligneous Conjunctivitis. Surv Ophthalmol 2003; 48: 369-88.

பாதி நோயாளிகளுக்கு நீடித்த மரப்படலக் கண்சவ்வழற்சி இரு விழியையும் பாதிப்பதாக இருக்கும். பல மாதங்களில் இருந்து பல ஆண்டுகள் வரை நோய் நீடிக்கும்.

கடுமையைப் பொறுத்து, கண் அறிகுறிகள் கீழ்வருமாறு காணப்படும்:

ஆரம்ப நேர்வுகள்:

 • சிவப்பு.
 • நீடித்த நீர் வடிதல்.
 • லேசான அசௌகரியம்.
 • வலி.
 • ஒளிக்கூச்சம்.
 • கண்சவ்வில் வெள்ளை அல்லது சிவப்பு திரட்சி.

கடுமையான நேர்வுகளில்:

 • தொடர் அசௌகரியம் தினசரி வேலைகளைப் பாதிக்கும்.
 • புண் இமை விளிம்புக்கும் அப்பால் செல்லும்.
 • படலங்கள்.

கண்சவ்வுப் புண் பொதுவாக பெற்றோர்களால் கண்டறியப்படுகிறது.

மண்டலம்சார் அறிகுறிகள்:

வாய்-தொண்டை:

கண்சவ்வுக்கு அடுத்த படியாக அடிக்கடி பாதிக்கப்படும் பகுதி வாய் ஆகும். இதில்-

 • பல் ஒருங்கிணைப்பு இழப்பு.
 • வலியற்ற முடிச்சுருப் புண்கள்.
 • பல்லீறுகளில் இயல்பற்ற திசுவளர்ச்சி

காதுகள்:

 • மாறி மாறி கேட்கும் திறன் இழப்பு.
 • செவிப்பறைச் சவ்விலும் நடுக்காதிலும் நீடித்தத் தொற்று.

மூச்சுப்பாதை:

 • குரல் மாறுதல்.
 • நெஞ்சுத் தொற்று அல்லது திரும்பத்திரும்ப வரும் நிமோனியா.
 • உயிருக்கு ஆபத்தான மூச்சுப்பாதை அடைப்பு.

பிறப்புச் சிறுநீரகப் பாதை:

பெண்ணுறுப்புப் பாதையில் உருவாகும் மரப்படலப் புண்கள் பெரும்பாலும் கருப்பைக் கழுத்தைப் பாதித்து மரப்படல கருப்பைவாய் அழற்சியை ஏற்படுத்துகிறது. யோனி, கருக்குழல், கருப்பை மற்றும் கருப்பை உள்வரிச்சவ்வு ஆகியவற்றில் புண்கள் ஏற்படும். இதனால் ஏற்படுபவை-

 • சூதக வலி (மிகவும் பொதுவான அறிகுறி)
 • மலட்டுத்தன்மை

சிறுவர் தோல் முண்டு:

இது ஓர் அரிய தோல் வியாதி. இதில் சிறு மஞ்சள்-பழுப்பு கசியும் பருக்கள் காணப்படும்.

பிறவி அடைப்பு மண்டை வீக்கம்:

மரப்படலக் கண்சவ்வழற்சி நோயாளிகளுக்கு இது அரிதாகக் காணப்படும்.

பிளாஸ்மினோஜன் குறைபாட்டால் மரப்படலக் கண்சவ்வழற்சி ஏற்படுகிறது என்பதை ஆதரிக்கும் சான்றுகள் உள்ளன.

இரு வகையான பிளாஸ்மினோஜன் குறைபாடுகள் உள்ளன:

 • வகை 1 (குறை-பிளாஸ்மினோஜன்) இது அளவுக் குறைபாடு.
 • வகை 2 (துர்- பிளாஸ்மினோஜன்) இது தன்மைக் குறைபாடு

மரப்படல கண்சவ்வழற்சியோடு அதிகமாகத் தொடர்புடையது வகை 1 ஆகும்.

பிளாஸ்மினோஜன் குறைபாட்டால் காயம் ஆறும் திறன் குறைகிறது. இதன் பாதிப்பு கண்சவ்வு போன்றச் சளிச்சவ்வுகளில் அதிகமாக இருக்கும். காயம் ஆறும் திறன்குறைவால் குருணைத் திசு உருவாக்கம் தடுக்கப்பட்டு மிகையாகப் பைப்ரின் படிகிறது. இவ்வாறு, பைப்ரின் செறிந்த படலங்கள் அல்லது சளி இழைகள் திரண்டு, அழற்சி செல்களையும் நார்செல்களையும் தூண்டும் பொழுது பைப்ரின் உலர்ந்து கண்சவ்வுப் புண்கள் மரப்படலமாக உறுதி பெற்று நிலைக்கின்றன. இதே போன்றப் பிறழுடல்கூறு பொறிநுட்பம் பிளாஸ்மினோஜன் குறைபாட்டால் நிகழும் கண் அல்லாத பிற உடல் பகுதியிலும் காணப்படும்.   

புறக்குழல் இடைவெளிகளில், பிளாஸ்மினோஜன் செயல்முறை குறைவாக இருக்கும்போது அல்லது இல்லாதபோது, நார்ப்பொருள் முறிவு கெடுகிறது. இருப்பினும், குழல்களில் நிலைமை இதுவல்ல. மரப்படல கண்சவ்வு மற்றும் பிளாஸ்மினோஜன் குறைபாட்டு நோயாளிகளில் குருதிக்கட்டு நிகழ்வு இல்லாமல் இருப்பதில் இருந்து இதை உய்த்துணரலாம். பிளாஸ்மினோஜன் குறைபாடும் மரப்படல கண்சவ்வழற்சியும் கொண்ட நோயாளிகளில் பிளாஸ்மினால் தூண்டப்படாத நார்ப்பொருள்முறிவு அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது.

நோய் மரபியல்:

மரபாக நோயைக் கொண்டுசெல்லும் குடும்பங்களில் பிறப்புக்கு முன்னான நோய் கண்டறிதலுக்கு இடம் இருக்கிறது. அடைப்புத் தலைநீர் மிகைப்பு நேர்வுகளுக்கு இது இன்றியமையாதது ஆகும்.

மரப்படலப் புண்கள் உருவாகக் காரணங்கள்:

 • பிளாஸ்மினோஜன் மரபணுவில் பரவலான  பிறழ்வுகள். இதுவே மிகவும் பொதுவான காரணம். பிளாஸ்மினோஜனின் மரபணு நிறப்புரி 6-ல் உள்ளது. இது பெரும்பாலும் கல்லீரலால் உற்பத்தி செய்யப்படுகிறது.
 • கூட்டு-வெவ்வேறு பண்புடைப் பிறழ்வுகள்
 • ஒருபண்புப் பிறழ்வுகள்.

திசுக் காயம்:

தோற்றம், திசுநோயியல், மருத்துவப் போக்கு மற்றும் சிகிச்சையினால் ஏற்படும் பலாபலன் ஆகியவற்றைக் கொண்டு திசுக் காயத்துக்கு எதிராக உண்டாகும் அபரீதமான அழற்சி பதில்வினையின் விளைவே மரப்படல கண்சவ்வழற்சி ஆகும் என நம்பப்படுகிறது. இக்காயம் தொற்று, அறுவை உட்பட உடல் ரீதியான காயம் ஆகியவற்றால் ஏற்படலாம். இக் காரணிகள் மரபு ரீதியாக ஏற்கெனவே அமைந்துள்ள ஒன்றைத் தூண்டி இந்தப் பதில்வினையை உருவாக்கலாம். உதாரணம்: பிளாஸ்மினோஜன் குறைபாடு. அடிக்கடி கண் உறுத்தல்களுக்கு ஆட்படுவதால், பிளாஸ்மினோஜன் குறைபாட்டின் மிகவும் பொதுவான வெளிப்பாடாக விளங்குவதே கண்சவ்வழற்சி என்ற அடைப்படையை சுஸ்ட்டரும் செரிகார்டும் ஏற்றுக்கொண்டனர் (Schuster V, Seregard S. Ligneous Conjunctivitis. Surv Ophthalmol 2003; 48: 369-88). இந்த உறுத்திகள் அந்தந்தப் பகுதியில் அழற்சியைத் தொடங்கி அல்லது நிரந்தரப்படுத்தி மரப்படலத்தை உருவாக்கலாம்.

பல நேர்வுகளில், ஸ்டேஃபிலோகோக்கல், ஸ்ட்ரெப்டோகோக்கல் மற்றும் ஹீமோஃபிலஸ் கண்சவ்வழற்சி போன்றவற்றை உள்ளடக்கிய பல  முன்னர் ஏற்பட்ட நுண்ணுயிரி அல்லது வைரல் தொற்றுக்கள் காணப்படுகின்றன. இத்தகைய நேர்வுகளில், மரபு ரீதியாக நோய்வாய்ப்படும் கூறுள்ள நோயாளிகளில், தொற்றை உண்டாக்கும் உயிரிகளால் தூண்டப்பட்ட கண்சவ்வுக் காயத்தின் அசாதாரணப் பதில்வினையாக மரப்படலம் உருவாகிறது எனத் தோன்றுகிறது.

குறிப்பாக அறுவைக் காயத்தின் விளைவாக மரப்படலம் தோன்றுவதாக எண்ணப்படுகிறது. கண்சவ்வுக் காயத்தினால் ஏற்படும் நோய்த்தடுப்பு மண்டலத்தின் ஓர் அசாதரணப் பதில் வினையால் மரப்படலம் உருவாவதாகத் தோன்றுகிறது.

மருத்துவ ரீதியான நிலைமை (கண் மற்றும்/அல்லது கண்ணுக்குப் புறம்பான படலப் புண்கள்), குறிப்பிட்ட திசுஆய்வியல் கண்டுபிடிப்புகள் மற்றும் சாத்தியக் கூறுள்ள குடும்ப வரலாறு ஆகியவையின் அடிப்படையில் மரப்படல கண்சவ்வழற்சி கண்டறியப்படுகிறது. பெரும்பாலான மரப்படல நோயாளிகளுக்கு மிகைப் பிளாஸ்மினோஜன் குறைபாட்டைக் காணமுடியும்.

பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தில் காரணமான பிறழ்வை இனம் கண்டால் குழந்தைப் பிறப்புக்கு முன்னான நோய்கண்டறிதல் சாத்தியம் ஆகும்.

கண்சார் அம்சங்கள்:

கண் பரிசோதனை ஒரு கண் மருத்துவ நிபுணரால் பிளவு-விளக்கின் கீழ் (உயிர்- நுண்ணோக்கியியல்) மேற்கொள்ளப் பட வேண்டும்.

குறிப்பாக நீடித்த கண்சவ்வழற்சி உடைய நோயாளிகளுக்கு, கசிவு அல்லது படலங்கள் ஆரம்பக் கட்டத்தில் தெரிவதில்லை.

கண்சவ்வு மரப்படல புண்கள்: ஆரம்பக் கட்ட உண்மையான மரப்படலப் புண்கள் இரத்தக் குழல்கள் நிறைந்ததும், மேல் எழும்பியதும், உடையக்கூடியதுமான புண்களாகத் தோன்றும்.  கட்டியான மஞ்சள்-வெள்ளை சளிக் கசிவால் மூடப்பட்டிருக்கும். இந்தப் புண்ணை ஓர் இடுக்கியால் எளிதாக அகற்றி விடலாம். ஆனால் அகற்றும் போது இரத்தக் கசிவு உண்டாகும். அழற்சி தொடரும் போது, ஒரு வெள்ளையான, கட்டியான, இரத்தக் குழலற்ற திரட்சி புதுக்-குழல் படலத்துக்கு மேல் தோன்றுகிறது. இதை அகற்றினால் பெரும்பாலும் சில நாட்களுக்குள் அதே அளவுள்ள புண் மறுபடியும் உருவாகிறது. இவை பெரும்பாலும் மேல்கீழ் இமைசார் கண்சவ்வில் தோன்றினாலும், சந்திப்பு (லிம்பஸ்) உட்பட குமிழ் கண்சவ்விலும் தோன்றும். குமிழ் கண்சவ்வு பாதிப்பு புதிதாக அல்லது இமைசார் புண்ணின் தொடர்ச்சியாக உண்டாகும். தகுந்த சிகிச்சைக்குப் பிறகும் அழற்சி தொடரலாம். நீடித்தப் புண்கள் கட்டியாகி, குழல்வளர்ந்து, உறுதியாகி மரப்படலம் எனப் பெயர் பெறுகிறது.

வெண்படலப் புண்கள்:

 • புதுக்குழல் உருவாதல்
 • வடுவுறல்
 • தொற்று
 • மறைதல்

மண்டலம்சார் அம்சங்கள்:

காய்ச்சல் அல்லது தொற்று: காய்ச்சல் அல்லது மூச்சுப் பாதை, சிறுநீர்ப்பாதை அல்லது பெண்ணுறுப்புப் பாதைத் தொற்றுகள் மரப்படலத் தோற்றத்துக்கு முன் அல்லது உடன் ஏற்படலாம். இவை படலம் உருவாகத் தூண்டியாகவும் செயல்படலாம்.

வாய்த்தொண்டை :

படலப் புண்ணால் ஏற்படுபவை:

 • பல் ஒருங்கு இழப்பு
 • வலியற்ற முடிச்சுப் புண்கள்
 • பல்லீறு மிகைத்திசு வளர்ச்சி

காதுகள்:

கீழ்வருவனவற்றில் படலப் புண்கள் உண்டாகலாம்:

 • செவிப்பறைப் படலம்
 • இடைச்செவி அழற்சி

மூச்சுப் பாதை:

 • தொண்டை
 • குரல்வளை
 • மூச்சுக்குழல்
 • மூச்சுக்குழாய் மரம்

பிறப்புசிறுநீர்ப்பாதை:

 • கருப்பை வாய் அழற்சி
 • யோனி
 • கருமுட்டைக் குழல்கள்
 • கருப்பை
 • கருப்பை உள்வரிச் சவ்வு

சிறுவர் தோல் முண்டு:

இது ஓர் அரிய தோல் வியாதி. குறிப்பாக வெயில் பாதித்த இடங்களில் சிறு, மஞ்சள்-பழுப்பு கசியும் பருக்கள் உருவாகும். பருவம் அடைவதற்கு முன் இது ஏற்படும்.

பிறவி அடைப்புத் தலைவீக்கம்:

மரப்படல கண்சவ்வழற்சி நோயாளிகளுக்கு இக்கோளாறு இருக்கலாம்.

ஆய்வக நோய்கண்டறிதல்:

 • அசாதாரண பிளாஸ்மினோஜன் செயல்பாடு மற்றும்/அல்லது எதிர்விளைமம்: ஆய்வக சோதனை அசாதாரண பிளாஸ்மினோஜன் செயல்பாடு மற்றும்/அல்லது எதிர்விளைமத்தோடு கூடிய கோளாறை உறுதி செய்கிறது. மரப்படலப் புண்கள் வகை 1 பிளாஸ்மினோஜன் குறைபாட்டில் பொதுவாகக் காணப்படுவதால் எதிர்விளைம சோதனை மட்டுமே இந்த நோய் இல்லை என்பதைக் கூறப் போதுமானதாக இருப்பதில்லை.
 • பெற்றோர் சோதனை: இந்த நோயைக் கண்டறிவதற்கு மரபியல் பிறழ்ச்சியை இனங்காண பெற்றோர் சோதனை செய்யலாம்.

திசுநோய்க்கூறியல்/நோய்த்தடுப்பு-திசுவேதியல் மதிப்பீடு:

மரப்படலத்தைத் திசுவாய்வியல் சோதனைக்கு உட்படுத்தும் போது மேலோட்டமான அல்லது மேல்தோல்சார்ந்து அமிலச்சாயசெல் படிக உருவமற்ற பளிங்குரு, அமிலாய்டு போன்ற பொருளோடு பல்வேறு விகிதத்தில் குருணை திசுக்களும் அதனோடு அழற்சி செல்களும் (நிணசெல், ஊனீர் செல் மற்றும் குருணைசெல்) காணப்படுகின்றன. இந்தப் படிக உருவமற்ற பளிங்குருப் பொருள் முக்கியமாக பைபிரினையும் பிற ஊனீர் கொழுப்புகளான அல்புமின் மற்றும் இமியூன் குளோபுலின்களையும் (முக்கியமாக IgG) கொண்டுள்ளது. மரப்படலப் புண் அடுத்துள்ள குருணைத் திசுக்களில் பல்வேறு அளவில் மியூக்கோ-பாலிசாரைடுகளைக் கொண்டிருக்கலாம். மரப்படலப் புண்களின் பல்வேறு கூறுகளுக்கு மூலமாக அசாதாரணக் குருதிக்குழல் உட்புகவிடுந்தன்மையும் கூட கூறப்பட்டு வருகிறது. கண்சவ்வு புதுக்குழல் உருவாக்கத்தில் இருந்து ஒரு ஊனீர்-நார்ப்பொருள் புறக்குழல்நீர் தொடர்ந்து உறைதல் அடைந்து அதன் விளைவாக குருணை திசுக்கள் உருவாவாதோடு பளிங்குருப் பொருளும் திரண்டு கட்டியாகி மரப்படலம் உருவாகிறது என்று மெலிக்கியன் அனுமானித்தார் ((Melikian H E. Treatment of ligneous conjunctivitis. Ann Ophthalmol 1985; 17: 763-65)

மரப்படலக் கண்சவ்வழற்சி புண்களின் நோய்த்தடுப்பு – திசுவேதியல் ஆய்வுகள் ஒரு செல் ஊடுறுவலைக் காட்டின.  இது முக்கியமாக T  நிண செல்களால் உருவாகி இருந்தன. நோய்த்தடுப்பு-ஒளிர்தல் உத்திகள் வெண்படல இழையவலையின் பளிங்குருப் பொருட்களின் முக்கியக் கூறுகள் இம்யூ – குளோபுலின்கள் எனக் காட்டின.(முக்கியமாக IgG).

இந்தக் கோளாறுக்கு மேற்பூச்சு சைக்ளோஸ்போரின் பிறவற்றை விட பலனளிப்பதாகும். சைக்ளோஸ்போரின் A , T செல் பதில்வினை செயலூக்கத்தையும் சேர்ப்பையும் தடுக்கிறது. இறுதியாக  B நிணசெல்களும் ஊனீர் செல்களும் குறைவு படுகின்றன. இந்த முடிவுகள் நோய்த்தடுப்பு பதில்வினையின் மேல் சைக்ளோஸ்போரின் A யின் பகுதிசார் பலனைக் காட்டுகிறது. மருத்துவ பதில்வினையும், சைக்ளோஸ்போரின் A யின் பலனின் திசுநோயியல் உறுதிப்படுத்தலும் நோயின் அழற்சிக் கூறை உறுதிப்படுத்துகிறது.

பின்வருபவற்றில் இருந்து மரப்படல கண்சவ்வழற்சியை வேறுகாண வேண்டும்:

பின் வருவன போன்ற நீடித்த போலிப் படலக் கண்சவ்வழற்சியை உருவாக்கும் எந்த ஓர் அழற்சி அல்லது தொற்று நோய்:

 • வைரல் கண்சவ்வழற்சி

சிற்றக்கித் தொற்று

வெண்படல அழற்சி எழுச்சி

பால் உண்ணி

 • நுண்ணுயிரி கண்சவ்வழற்சி

ஸ்டெபிலோகாக்கஸ் ஆரியஸ்

ஸ்ட்ரெப்ட்டோகாக்கஸ் ஹீமோலிட்டிக்கஸ்

நெய்சீரியா கொனேரியா

கிளமைதியா டிரோக்கொமேட்டிஸ்

கோரினேபாக்டீரியம் டிப்தீரியே

 • ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி

வெர்னல் வெண்படல அழற்சி

 • நச்சு கண்சவ்வழற்சி
 • வேதியல் கண்சவ்வழற்சி

அமிலம்

காரம்

 •  ஸ்டீவன்ஸ்-ஜாண்சன் நோய்த்தாக்கம்
 • அமிலோய்டோசிஸ்

மருத்துவக் கண்காணிப்பின் கீழேயே நோய்மேலாண்மை செய்ய வேண்டும்.

மரப்படல கண்சவ்வழற்சி மேலாண்மை திருப்தியாக இருப்பதில்லை. உடனடியாக குணம் அடைவது அரிது.

எந்த ஒரு எதிர்-நார்ப்பொருள் முறிவு சிகிச்சையையும் நிறுத்துவது முக்கியம் ஆகும்.

மருத்துவ சிகிச்சை:

 • பிளாஸ்மினோஜன் மாற்றுசிகிச்சை: மண்டலம்சார் மற்றும் மேற்பூச்சு பிளாஸ்மினோஜன் மாற்று அல்லது புதிதாக உறைந்த பிளாஸ்மா (FFP) ஆகியவைத் தற்போது மரப்படல கண்சவ்விற்கு முக்கிய சிகிச்சையாக  ஆராயப்பட்டு வருகிறது. மிங்கர்சும் பிறரும் பிளாஸ்மினோஜன் குறைபாட்டுக் கொளகையை முன்மொழிந்து பிளாஸ்மினோஜன் மாற்று சிகிச்சையை முயன்றனர். புதிதாக உறைந்த பிளாஸ்மாவில் இருந்து எடுக்கப்பட்ட மேற்பூச்சு பிளாஸ்மினோஜன் தயாரிப்புகள் வெற்றிகரமாக மரப்படல கண்சவ்வழற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. புது உறைந்த பிளாஸ்மாவுக்குப் பதிலான பிளாஸ்மினோஜன் செறிவு குறைந்த நிலைப்புத் தன்மை கொண்டதும் எளிதில் பெற முடியாததுமாகும்.
 • சைக்ளோஸ்போரின் A: பிளாஸ்மினோஜன்னுக்கு முன்னர் சைக்ளோஸ்போரின் A மருந்து சிகிச்சைக்கு பிரகாசமான கூறாக இருந்தது.
 • பிற நடவடிக்கைகள்: மரத்திசுக்களில் குருணைத் திசுக்களும் அழற்சி செல்களும் இருப்பதை ஆரம்ப அவதானிப்பில் கண்டு அதன் அடைப்படையில் குறிப்பற்ற இந்தக் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்றவாறு மேற்புச்சு மருந்துகள் உருவாக்கப்பட்டன. மேற்பூச்சு மருந்துகளான ஹையலுரோனிடேஸ், ஹெப்பாரின், அசத்தியோபிரைன், ஆல்பா-சைமோடிரிப்சின், சோடியம் குரோகிளைகேட், ஆண்டிபயாடிக்ஸ். கோர்ட்டிகோஸ்டிராய்டுகள் மற்றும் நார்ப்பொருள் முறிப்பிகள் குறைந்த பலனை அளித்தன.

அறுவை சிகிச்சை

மரப்படலக் கண்சவ்வழற்சிக்கு கண்சவ்வுக் காயம் ஒரு நோயியல் காரணியாக இருக்கலாம் என்பதால் கண்சவ்வு அறுவையை அதிகக் கவனத்தோடு ஆற்ற வேண்டும்.

 • மரப்படலப் புண்களை அகற்றுதல்: மண்டலம்சார் மற்றும் மேற்பூச்சு பிளாஸ்மினோஜன் அல்லது புதிதாக உறைந்த பிளாஸ்மா சிகிச்சையும் போலிப்படலத்தை மெதுவாக்குவதில் உதவி செய்யவும் அகற்றலை எளிதாக்கவும் தொடங்கப்படுகிறது. அனைத்துக் கண் மரப்படலப் புண்களும் அடியைத் தீய்த்து முழுமையாக அகற்றப்படுகின்றன. கணிசமான அளவிற்கு நோயுள்ள பெரியவர்களுக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பொது மயக்க மருந்து அளிக்கப்படும். புண்களை முற்றிலுமாக அகற்றாவிட்டால் அவை உடனடியாக மறுபடியும் ஏற்படும். இதற்குக் காரணம் விடுபட்ட புண் மேற்பூச்சு மருந்துகளின் செயல்பாட்டைத் தடுக்கும்.

அறுவைக்குப் பின் உடனடியாக, மண்டலம் சார் மற்றும் மேற்பூச்சு புதிதாக உறைந்த பிளாஸ்மா (FFP) நோயாளிக்குத் தொடர்ந்து அளிக்கப்படும். கோர்ட்டிக்கோஸ்டிராய்ட் பரந்த வினை நுண்ணுயிர்க் கொல்லிகளும் மேற்பூச்சு சைக்ளோஸ்போரின் A யும் அளிக்கத் தொடங்குவர். இக்கோளாறு மீண்டும் உடனடியாகத் தோன்றுவதால் இந்த மருந்துகள் அறுவைக்குப் பின் கொடுக்கப்படுகின்றன.

ஒவ்வொரு நோயாளிக்கும்  தினமும் சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க மறுவளர்ச்சி இருக்கும். இது தினசரி அகற்றப்பட வேண்டும். அசாதாரண திசுக்கள் ஓரிரு நாட்களுக்குக் கூடத் திரள அனுமதித்தால் மேற்பூச்சு மருந்துகள் அடித் திசுக்களை அடைய அவை தடையாய் இருக்கும். இவையே மரப்படல தோற்றுவாய் ஆகும்.

திரும்ப வரும் புண்களுக்கு தொடர் அகற்றல் செய்யப்படுகிறது.

 • கருப்பைப் படல மாற்று: மரப்படல கண்சவ்வழற்சிக்கு கண்சவ்வு மறுசீரமைப்பு செய்ய பார்பினோவும் ரோலண்டாவும் கருப்பைப் படல மாற்று சிகிச்சை அளித்தனர் (Barabino S, Rolando M. Amniotic membrane transplantation in a case of ligneous conjunctivitis. Am J Ophthalmol 2004; 137: 752-753)

பிறவி அடைப்பு தலைவீக்கம் கொண்ட நோயாளிகளுக்கு அடைப்பை அகற்ற அறுவை தேவைப்படலாம்.

நோய்முன் கணிப்பு:

மரப்படல கண்சவ்வழற்சிக்கு முன்கணிப்பு பலதிறப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதியின் அகலம் நீளம் மற்றும் அது உண்டாக்கும் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டது. அழற்சியைக் கட்டுப்படுத்தும் திறன் மற்றும் போலிப் படலங்களின் மறுவருகையைப் பொறுத்தது அது. வெண்படல பாதிப்பு உடைய நோயாளிகளுக்கு பார்வை முன்கணிப்பு குறைவாக இருக்கும்.

பல நோயாளிகளுக்கு பாதிக்கப்பட்ட உறுப்பு செயலிழத்தல் (உ-ம். பார்வை இழப்பு, பல்லொழுங்கு இழப்பு) போன்ற நோய்பாதிப்புகள் ஏற்படும்.

போலிப்படலங்களுடன் மூச்சுப் பாதையில் மண்டலம் சார் பாதிப்பு ஏற்படுவது (மூச்சுக்குழல் புண்கள்) மூச்சுச் செயலிழப்பால் உயிருக்கு ஆபத்தாக முடியும். இத்தகைய நோயாளிகளுக்கு புண்களைத் தடுத்து அதன் தொடர்ச்சியை நிறுத்தும் குறிப்பான சிகிச்சை அவசியம்.

குறிப்பிடத்தக்க அளவு நோயால் பாதிக்கப் பட்டவர்கள் சிகிச்சை பெறாவிட்டால் வாழ்க்கை இன்பமாக இருக்க முடியாது.

மரப்படலக் கண்சவ்வழற்சி கீழ்வருவன போன்ற சிக்கல்களை உருவாக்கும்:

 • மேற்பூச்சு மருந்துகளை நிறுத்திய உடன் நோய் திரும்ப வரும்.
 • அறுவை மூலம் அகற்றிய பின் திரும்பத் தோன்றும்.
 • வெண்படலத்துல் புதுக்குழல் தோன்றுதல்.
 • வெண்படலம் வடுவுறல்.
 • வெண்படலத் துளை.
 • வெண்படலத் தொற்று.
 • பார்வை இழப்பு.
 • குழந்தைகளில் பார்வைத் தெளிவின்மை.

பொதுவாக இந்நோய் மரபுரீதியாகக் கடத்தப்படுத்துவதால் முதன்மையான தடுப்பு முறைகள் எதுவும் இல்லை.

 

 • PUBLISHED DATE : May 23, 2016
 • PUBLISHED BY : Zahid
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : May 23, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.