கருப்பைவாய்ப் புற்று

உடல் செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியே புற்றுநோய் ஆகும். அது உட்லின் எப்பகுதியிலும் உருவாகும். கருப்பை வாயில் உருவானால் அது கருப்பைவாய்ப் புற்று என அழைக்கப்படும். கருப்பையின் கீழ்ப்பகுதியே கருப்பை வாய். இது கருப்பையை யோனியோடு இணைக்கிறது. கருப்பைவாயின் கீழ்ப்பகுதி யோனிக்குள்ளும் மேல் மூன்றில் ஒரு பகுதி யோனிக்கு மேலும் காணப்படுகிறது. பெரும்பாலான புற்றுக்கள் மேல் கீழ்ப் பகுதிகள் இணையும் இடத்தில் உருவாகின்றன.

உலக அளவில் இது நான்காவது பரவலாகக் காணப்படும் புற்று நோய் ஆகும்.  உலகில் நன்கு வளர்ச்சி பெறாதப் பகுதிகளில் இது இரண்டாவது பரவலாகக் காணப்படும் புற்று. உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்பின் படி உலக அளவில் 530 000 புதிய நேர்வுகள் ஏற்படுகின்றன (2012 கணக்கீடு). ஏறக்குறைய 270000 மரணங்கள் நிகழ்கின்றன (பெண்களில் மொத்த புற்று நோயால் ஏற்படும் இறப்பில் 7.5%). இந்த மரணங்களில் 85 %, குறைந்த அல்லது மத்திய வருமான நடுகளில் நிகழ்கின்றன.

சகாரா சார் ஆப்பிரிக்கா, மெலநேசியா, லத்தின் அமெரிக்கா, காரிபியன், தென் மத்திய ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியா பகுதிகளில் கருப்பைவாய்ப் புற்று அதிகமாக உண்டாகின்றது என கணிக்கப்பட்டுள்ளது.

15 வயதுக்கு மேற்பட்ட 436.76 மில்லியன் பெண்கள் இந்தியாவில் உள்ளனர். இவர்களுக்கு கருப்பைவாய்ப் புற்று ஆபத்து உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 122844 பெண்களுக்கு கருப்பைவாய்ப் புற்று கண்டறியப்படுகிறது.  இந் நோயால் 67477 பேர் மரணம் அடைகின்றனர் (2012 கணிப்பு). இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் புற்று நோயில் இது இரண்டாவது பரவலாய் ஏற்படும்  நோயாகும். 15-44 வயதுடைய பெண்களிலும் இது இரண்டாவது பரவலாக ஏற்படும் புற்று நோயாகக் காணப்படுகிறது.

ஏறத்தாழ அனைத்துக் கருப்பைவாய்ப் புற்றுக்கும் மனிதக் காம்புக்கட்டி வைரஸ் (HPV)தொற்றைக் காரணமாகக் கூற முடியும்.  HPV,  ஒரு தொகுதி வைரசுகள் ஆகும். ஆண்களிலும் பெண்களிலும் புண்ணுள்ள அல்லது புண்ணற்றப் பால்வினை நோய்களுக்கு (STIs) இவையே காரணம்.  உலக அளவில் HPV வகைகள் (16 மற்றும் 18) 70% கருப்பைவாய்ப் புற்றையும், புற்றுக்கு முன்னான புண்களையும் உருவாக்குகின்றன.

இந்திய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், 82.7 % உள்ளூடுறுவிய கருப்பைவாய்ப் புற்று நோயில்  HPV இருப்பு காணப்பட்டது (HPV தகவல் மையத்தால்,  இருக்கும் பதிவுகளில் மேற்கொள்ளப்பட்ட முறையான மீள்பார்வை மற்றும் மீஆய்வின் படி)*.

குறைவயதுத் திருமணம், பல உடலுறவு இணையர், பலகரு கர்ப்பம், இன உறுப்பு சுகாதரம் இன்மை, சத்துணவுக் குறைபாடு, வாய்வழி கருத்தடை மருந்துகள் மற்றும் விழிப்புணர்வு இன்மை ஆகியவையே பிற கருப்பைவாய்ப் புற்றுக்கான நோய்க் காரணிகள்.

தெற்கு ஆசியாவில், 2012 கணக்கீடுப் படி, ஒரு ஆண்டில் நேர்வு விகிதம் (100000 பெண்களில்): இந்தியா 22, வங்காள தேசம் 19.2, ஸ்ரீலங்கா 13 மற்றும் ஈரான் 2.8 ஆகும். இந்தியாவிலேயே இந்த விகிதம் அதிகம்.

பெண்களுக்கு HPV தடுப்பு மருந்து அளித்தல், பரிசோதனை, முன் புற்றுப் புண்களுக்கு சிகிச்சை ஆகிய நடவடிக்கைகள் மூலம் கருப்பைவாய்ப் புற்றைத் தடுக்கலாம். ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் இதனைக் குணப்படுத்தலாம்.

குறிப்புகள்:

www.cancer.org/cancer/cervicalcancer/detailedguide/cervical-cancer

www.hpvcentre.net/statistics/reports/IND.pdf (Human Papillomavirus and Related Diseases Report, India, ICO Information Centre on HPV and Cancer (HPV Information Centre) 2015)

www.who.int/bulletin/volumes/85/9/06-038414/en/

www.who.int/mediacentre/factsheets/fs380/en/

www.who.int/immunization/diseases/hpv/en/

apps.who.int/iris/bitstream/10665/144785/1/9789241548953

பெண்களுக்கு ஏற்படும் ஆரம்பக் கட்ட கருப்பைவாய்ப் புற்று அல்லது முன் புற்றுக்கு அறிகுறிகள் எதுவும் காணப்படுவதில்லை. புற்று மிகவும் வள்ர்ச்சயுற்ற நிலையில்தான் அறிகுறிகள் தோன்றுகின்றன.

அறிகுறிகள்:

 • உடலுறவுக்குப் பின் முறையற்ற, மாதவிடாய்க்கு இடைப்பட்ட அல்லது அசாதாரண இரத்தப்போக்கு அல்லது பின் மாதவிடாய் இரத்தப் போக்கு.
 • வேதிக்கழுவல் அல்லது இடுப்புசோதனைக்குப் பின் இரத்தப் போக்கு.
 • யோனியில் அசௌகரியம் அல்லது துர்நாற்றமான கசிவு. கசிவில் இரத்தம் கலந்திருக்கும். மாதவிடாய்க்கு இடையில் அல்லது மாதவிடாய் நின்ற பின் இக்கசிவு இருக்கும்.
 • உடலுறவின் போது வலி.
 • முதுகு, கால் அல்லது இடுப்பு வலி.
 • களைப்பு, எடை இழப்பு, பசியின்மை
 • ஒரு கால் வீக்கம்

இந்த அறிகுறிகள் குறிப்பானவை அல்ல. வேறு சில நோய்த்தாக்கங்களிலும் இவை காணப்படும். ஆயினும், ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகுவது நலம். நோய் முற்றிய பின் கடும் அறிகுறிகள் காணப்படும்.

குறிப்புகள்:

www.who.int/mediacentre/factsheets/fs380/en/

www.webmd.com/cancer/cervical-cancer

கருப்பைவாய்ப் புற்று உருவாகும் சாத்தியக் கூறைப் பலகாரணிகள் அதிகரிக்கும்.

மனிதக் காம்புக்கட்டி வைரசே  மிக முக்கிய ஆபத்துக் காரணி (HPV).

 • பால்வினை மூலமாகவே பெரும்பாலும் எச்.பி.வி. பரவுகிறது. பால்வினை ஆரம்பித்த உடனேயே பலருக்கு எச்.பி.வி. தொற்றுகிறது. நுழைப்பு உடல் உறவு இல்லாதபோதும் பரவுவதற்குத் தோல் தொடர்பு மட்டுமே போதுமானது.
 • தொற்று பரவி சில மாதங்களில் சிகிச்சை இன்றியே எச்.பி.வி. தொற்று தீரும். 90 % நேர்வுகள் 2 ஆண்டுக்குள் சரியாகும்.
 • சில வகையான எச்.பி.வி.யால்  ஏற்படும் ஒரு சிறு பகுதி தொற்று நிலைத்து நின்று புற்றாக மாறுகிறது. புற்று  உருவாக்கும் எச்.பி.வி. தொற்று ஏற்பட்டு அது புற்றாக உருவாக 15-20 ஆண்டுகள் ஆகும்.

எச்.பி.வி.  தொற்று நிலைத்து புற்றாக உருவாக ஆபத்துக் காரணிகள்:

 • முன்பருவ முதல் உடல் உறவு
 • பல உடலுறவு இணையர்
 • ஒரே பேற்றில் அதிக குழந்தைகள் பிறப்பு
 • இயக்குநீர் கருத்தடை மருந்துகளை நீண்ட நாள் பயன்படுத்துதல்
 • புகையிலை பயன்பாடு
 • நோய்த்தடுப்பு அழுத்தல் (எச்.ஐ.வி. உள்ளவர்களுக்கு எச்.பி.வி. தொற்று ஏற்படும் அபாயம் அதிகம்)
 • குறைந்த சமூகப் பொருளாதார நிலை, மோசமான சுகாதாரம் மற்றும் ஆண்டாக்சிடெண்டுகள் குறைந்த உணவு.
 • கிளமைதியா டிராக்கோமேட்டிஸ் மற்றும் சிற்றக்கி வைரஸ் வகை-2 தொற்றுடன் இணைந்து.

குறிப்புகள்

www.who.int/mediacentre/factsheets/fs380/en/

www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3385284/

www.cdc.gov/std/tg2015/hpv.htm

www.who.int/bulletin/volumes/85/9/06-038414/en/

பெரும்பாலான கருப்பைவாய்ப் புற்றும் எச்.பி.வி. தொற்றும் ஆரம்ப கட்டத்தில் உடல் குறிகளையும் நோய்க்குறிகளையும் காட்டுவதில்லை. முன்புற்றுப் புண்களையும் ஆரம்பக் கட்டப் புற்றையும் பரிசோதனை மூலம் கண்டறியலாம்.

கருப்பைவாய்ப் புற்றுப் பரிசோதனை: மூன்று வெவ்வேறு வகையான பரிசோதனைகள் உள்ளன.

 1. மரபான (பேப்) சோதனை மற்றும் திரவ அடிப்படை திசுவியல்  (LBC):அசாதாரண செல்களைக் கண்டறிய பேப் சோதனை நடத்தப்படுகிறது. இவற்றை சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் அவை புற்றாக மாறும். மரபான பேப் சோதனையில், மாதிரி ஒரு கண்ணாடி நுண்காட்டி வில்லையில் வைக்கப்பட்டு ஒரு நிலைநிறுத்தி சேர்க்கப்படுகிறது.  ஒரு தானியங்கும் திரவ-அடிப்படை பேப் திசுச் சோதனையில், கருப்பைவாய் செல்கள் ஒரு தூரிகை அல்லது பிற கருவியால் சேகரிக்கப்பட்டு ஒரு திரவப் பதப்படுத்தி கொண்ட குப்பியில் வைக்கப்படும். திரவ அடிப்படை சோதனையின் ஒரு சாதகம் என்னவெனில் ஒரே செல் மாதிரியை அதி ஆபத்து எச்.பி.வி. வகைக்கும் பயன்படுத்தலாம். இந்தச் செய்முறை ‘பேப் மற்றும் எச்.பி.வி. இணை சோதனை’ எனப்படும்.
 2. அசெட்டிக் அமிலத்துடன் பார்வை சோதனை (VIA)-மருத்துவர் கருப்பை வாயில் நீர்த்த அசெட்டிக் அமிலத்தைத் தடவி சோதனை மேற்கொள்ளுவார். அசாதாரணப் பகுதிகள் வெண்மை ஆகும். அசாதாரணப் பகுதியில் இருந்து செல்கள் சேகரிக்கப்பட்டு மேற்சோதனை மேற்கொள்ளப்படும்.
 3. அதி ஆபத்து எச்.பி.வி வகை அறிய எச்.பி.வி. சோதனை கருப்பை வாய் செல்களில் அதி ஆபத்து எச்.பி.வகை உள்ளதா என அறிய இச்சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
 • 30-49 வயது பெண்கள் குறைந்த பட்சம் வாழ்நாளில் ஒருமுறையாவது முழுபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அடிக்கடி செய்து கொள்வது நல்லது (உ.சு.நி). எச்.ஐ.வி.யோடு வாழும் பெண்கள் வேறு ஒரு சோதனை நிரலைப் பின்பற்ற வேண்டும்.
 • வி.ஐ.ஏ. அல்லது திசுவியல் சோதனையில் எதிர்மறை முடிவு பெற்றவர்கள் 3-5 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மறுசோதனை மேற்கொள்ள வேண்டும். எச்.பி.வி. சோதனையில் எதிமறை முடிவு பெற்றவர்கள் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மறுபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
 • பரிசோதனையில் புற்று என சந்தேகம் ஏற்பட்டால் அதற்கான கண்டறிதல் வசதியும் சிகிச்சை வசதியும் கொண்ட இடத்திற்குப் பரிந்துரை செய்ய வேண்டும்.
 • கருப்பை வாய் முன்புற்று சோதனையில் நேர்மறை  முடிவு கிடைத்தால், குளிர்சிகிச்சை அல்லது கண்ணி மின்னறுவை அகற்றல் முறையைப் (LEEP) பயன்படுத்தலாம். 12 மாதங்களுக்குப் பின் சிகிச்சைக்குப் பின்னான தொடர்சிகிச்சை பெற வேண்டும்.

கருப்பைவாய் முன்புற்று கண்டறிதல் சோதனை: நேர்மறை பரிசோதனைக்குப் பின் சிலவேளைகளில் கண்டறிதலை அல்லது முன்புற்று அல்லது புற்றை உறுதிப்படுத்த ஒரு கண்டறிதல் சோதனை பயன்படுத்தப்படும். பெண்ணுறுப்பு அகநோக்கல், திசுவளர்ச்சி சோதனை மற்றும் கருப்பைவாய் அகச்சுரண்டல் ஆகியவையே கருப்பைவாய் முன்புற்றுக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கண்டறிதல் சோதனைகள்.

 • பெண்ணுறுப்பு அகநோக்கல் மூலம் கருப்பை வாய், யோனி, யோனிவாய் ஆகியவை கோல்ப்போமானி என்ற கருவியால் சோதிக்கப்படும். பரிசோதனையில் நேர்மறை முடிவு பெற்றவர்களுக்கு இது பயன்படுத்தப்படும்.
 • திசுசோதனையில் அசாதாரண திசு மாதிரி நுண்காட்டியியல் சோதனைக்காக அகற்றப்படும். விஐஏ நேர்மறை அல்லது புற்று என சந்தேகப்படும் இடங்களில் திசு சோதனை நடத்தப்படும்.
 • கருப்பைவாய் அகச்சுரண்டல் முறையில் கருப்பை வாய்ப்பகுதியின் உட்பகுதியில் இருந்து ஒரு மெல்லிய தட்டைக் கரண்டி மூலம் நுண்ணோக்கி சோதனைக்காக மாதிரி சுரண்டப்படும். கருப்பை அகப்புற திசுத் தூரிகை மாதிரியும் ஆய்வுக்காகப் பயன்படுத்தப்படலாம்.

கருப்பைவாய்ப் புற்றின் நிலைகள்:

 • நிலை 0: கருப்பை வாய் சுற்றின் மேலடுக்கு செல்களிலேயே புற்று காண்ப்படும். உட் திசுக்களில் இருப்பதில்லை.  இவற்றை அசல் புற்றுக்களாக கருதுவதில்லை. இவை ஊடுறுவிய புற்று அல்ல.
 • நிலை I: புற்று கருப்பை வாய் மேல்சுற்றில் இருந்து ஆழ் திசுக்களுக்குப் பரவி விட்டாலும் இன்னும் கருப்பைப் பகுதியிலே உள்ளது. நிணமுடிச்சுகளுக்கோ உடலின் பிற பகுதிகளுக்கோ பரவவில்லை.
 • நிலை II: புற்று கருப்பைவாய்ப் பகுதியில் இருந்து யோனி, கருப்பைவாயின் அருகில் உள்ள திசுக்களுக்குப் பரவி விட்டாலும் இன்னும் இடுப்பு பகுதியிலேயே உள்ளது. நிணமுடிச்சுகளுக்கோ உடலின் பிற பகுதிகளுக்கோ பரவவில்லை.
 • நிலை III: புற்று கருப்பை வாய் மற்றும் யோனிக்கு வெளியே பரவி விட்டாலும் நிணமுடிச்சுகளுக்கோ உடலின் பிற பகுதிகளுக்கோ பரவவில்லை.
 • நிலை IV: நோய் அருகில் உள்ள உறுப்புகளுக்கும் உடலின் பிற பகுதிகளுக்கும் பரவி விட்டது.

குறிப்புகள்:

apps.who.int/iris/bitstream/10665/144785/1/9789241548953

www.cancer.gov/types/cervical/pap-hpv-testing-fact-sheet

www.who.int/mediacentre/factsheets/fs380/en/

www.acog.org/~/media/districts/district%20ii/pdfs/uspstf_cervical_

www.cancer.net/cancer-types/cervical-cancer/stages

பரிசோதனையில் அசாதாரண செல்கள் அல்லது புண்கள் கண்டறியப்பட்டால் அவற்றை அகற்றும் சிகிச்சை தேவை. இதில் குளிர்சிகிச்சை (கருப்பை வாய் அசாதாரணத் திசுக்களை உறைய வைத்து அழித்தல்) அல்லது கண்ணி மின்னறுவை அகற்றல் முறை (நோயாளிக்கு குளிர் சிகிச்சை அளிக்க சாத்தியமில்லாத போது) அடங்கும்.

புற்று நோய் என்று கண்டறியப்பட்டால் சிகிச்சை அளிக்கப் பல்துறை அணுகுமுறை தேவைப்படும். பெண்ணோய், கதிரியல் மற்றும் மருத்துவ புற்று நோய் நிபுணர்கள் சிகிச்சையில் ஈடுபடுவர். நோயின் நிலையைப் பொறுத்து சிகிச்சையும் வேறுபடும்.

 • ஆரம்பக் கட்ட ஊடுறுவும் புற்று நோய்க்கு அறுவை பரிந்துரைக்கப்படுகிறது.
 • நோய் முன்னேறிய நேர்வுகளில் கதிர்வீச்சு மற்றும் வேதியற் சிகிச்சை இணைத்துத் தரப்படும். நோய் பரவிய நிலையில்  அறிகுறிகளையும் வலியையும் கையாள வேதியல் மற்றும் கதிரியல் சிகிச்சை அளிக்கப்படும்.
 • கடினமான இறுதி நிலையில் இருக்கும் நோய் முற்றிய நோயாளிகளுக்குக் கண்னியத்தையும் அமைதியையும் அளிக்க வலி நிவரண கவனிப்பு அளிக்கப்படுகிறது.

குறிப்புகள்:

apps.who.int/iris/bitstream/10665/94830/1/9789241548694

emedicine.medscape.com/article/253513-treatment

கருப்பைவாய்ப் புற்றுத் தடுப்பும் கட்டுப்படுத்தலும்: ஒரு விரிவான அணுகுமுறை:

கருப்பைவாய்ப் புற்றைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும்  ஒரு விரிவான அணுகுமுறையை உ.சு.நி. பரிந்துரைக்கிறது. அதில் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும் மூன்று கூறுகள் உள்ளன: முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தடுப்பு.

முதல்நிலைத் தடுப்பு: எச்.பி.வி. தொற்று ஆபத்தைக் குறைக்கவும்

9-13 வயது சிறுமிகள் பால்வினையில் ஈடுபடுமுன் எச்.பி.வி. தடுப்பு மருந்து அளிப்பதில் இருந்து இது தொடங்குகிறது. இரு தடுப்பூசிகள் உண்டு: இரட்டை மற்றும் நான்கு வலு கொண்டவை. 70% கருப்பை வாய்ப் புற்றுக்குக்  காரணமான எச்.பி.வி. வகை 16 மற்றும் 18 க்கும் நால்திறன் தடுப்பூசி 100% பாதுகாப்பை அளிக்கிறது. இனவுறுப்பு பருவை உண்டாக்கும் எச்.பி.வி. வகை 6 மற்றும் 11-க்கும் இது பாதுகாப்பு அளிக்கும்.

வயதைப் பொறுத்து தடுப்பூசி அட்டவணை அமையும். உ.சு.நி (மார்ச் 2016) a இரு தடுப்பு மருந்துகளுக்கும் பரிந்துரைத்துள்ள அட்டவணை வருமாறு:

 • முதல் தடவை தடுப்பூசியின் போது பெண்ணின் வயது <15 எனில் இரண்டாம் வேளை மருந்து (0,6 மாதங்கள்) பரிந்துரைக்கப் படுகிறது (இரண்டு வேளை மருந்துக்கும் இடையில் இடைவெளி 5 மாதங்களுக்கும் குறைவாக இருந்தால் முதல் தடவைக்கு ஆறு மாதம் கழித்து மூன்றாம் வேளை மருந்தும் அளிக்கப்பட வேண்டும்).
 • முதல் வேளையின் போது பெண்ணின் வயது ≥ 15 என்றால் ஒரு மூன்று வேளை அட்டவணை (0, 1-2, 6 மாதங்கள்) பரிந்துரைக்கப் படுகிறது.
 • நோயெதிர்ப்பு சமரசம் மற்றும்/அல்லது எச்.ஐ.வி. தொற்று உள்ளவர்கள் என அறியப்பட்டால் 3-வேளை அட்டவணை பரிந்துரைக்கப்படும்.

(இந்தத் தடுப்பு மருந்து தொற்றைத் தடுக்குமே தவிர எச்.பி.வி அல்லது அது தொடர்பான புற்று போன்ற நோய்களுக்கு மருந்து அல்ல).

சில நாடுகள் ஆண்களுக்கு ஏற்படும் புற்று நோயையும் இன உறுப்புப் பருவையும் தடுக்க சிறுவர்களுக்குத் தடுப்பூசி இடுகின்றன.

இரு தடுப்பு மருந்துகள் (இரு மற்றும் நால் வலு) 120 நாடுகளில் உரிமம் பெற்று உள்ளன. இந்தியாவில் இவை, இந்தியப் பொது மருந்துக் கட்டுப்பாட்டாளரின் அங்கீகாரம் பெற்றவை. சிறுமியருக்கான எச்.பி.வி. தடுப்பு மருந்தை 63 நாடுகள் தங்கள் தேசிய நோய்த்தடுப்பு திட்டங்களில் சேர்த்துள்ளன. இந்திய குழந்தைமருத்துவர் கழகமும் (IAP), இந்திய மகப்பேறியல் மற்றும் பெண்ணோய் சங்கங்களின் கூட்டமைப்பும் (FOGSI)  சிறுமியருக்கான எச்.பி.வி. தடுப்பு  மருந்தை பரிந்துரைத்துள்ளன  b.

சிறுவர், சிறுமியருக்குப் பொருத்தமானவை என்று  பரிந்துரைக்கப் பட்டுள்ள பிற தடுப்பு முறைகளாவன:

 • பால்வினைகளைக் காலந்தாழ்த்தி தொடங்குவது உட்பட பாதுகாப்பான உடலுறவு முறைகளைப் பற்றிய போதனை.
 • ஏற்கெனவே பால்வினையில் ஈடுபட்டவர்களுக்குக் காப்புறை வழங்குதல்.
 • பொதுவாக இளமைப் பருவத்தில் தொடங்கும் கருப்பைவாய் மற்றும் பிற புற்றுக்களுக்கான ஆபத்துக் காரணியான புகையிலைப் பழக்கத்தைப் பற்றிய எச்சரிக்கை.
 • ஆண்குறி நுனித்தோல் அகற்றல்

ஆண்குறி நுனித்தோல் அகற்றலும் காப்புறைப் பயன்பாடும் எச்.பி.வி, பரவலுக்கு எதிரான சிறந்த காப்பாக நிருபிக்கப்படுள்ளன.

இரண்டாம் கட்டத் தடுப்பு: முன்புற்று பரிசோதனையும் சிகிச்சையும்

30-49 வயது பெண்களுக்குப் பரிசோதனை நடத்தி ஆரம்பத்திலேயே கண்டறிதலும், அபாயகரமான முன்புற்றுப் புண்களுக்கு சிகிச்சை அளித்தலும் பெரும்பாலான கருப்பைவாய்ப் புற்றுக்களைத் தடுக்க உதவும். ஒரு பெண்ணின் வழக்கமான சுகாதரப் பராமரிப்பில் கருப்பைவாய்ப் புற்று பரிசோதனையும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். எந்த அறிகுறிகளும் இன்றி முழு உடல் நலத்தோடு இருப்பதாக உணர்பவர்களுக்கும் புற்று மற்றும் முன்புற்று நோய் இருந்தால் இப் பரிசோதனை மூலம் அதைக் கண்டறிய முடியும்.  முன்புற்று மற்றும் கருப்பைவாய்ப் புற்றைப் பரிசோதனை மூலம் கண்டறிவத்தால் ஆரம்பக் கட்டத்திலேயே அவற்றைக் குணப்படுத்திவிட முடியும் என்பதே இப்பரிசோதனையின் முக்கிய அம்சம்.

மூன்றாம் கட்டத் தடுப்பு: ஊடுறுவும் கருப்பைவாய்ப்புற்றுக்கு சிகிச்சை

கருப்பைவாய்ப் புற்றால் நிகழும் மரணங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே மூன்றாம் கட்ட தடுப்புமுறையின் நோக்கம். ஊடுறுவும் கருப்பைவாய்ப் புற்று இருக்கும் சந்தேகம் எழுந்தால் நோயாளிகளை உடனடியாப் புற்றைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வசதி கொண்ட மருத்துவ மனைக்கு அனுப்ப வேண்டும்.  ஆரம்பக் கட்டத்தில் அளிக்கப்படும் தகுந்த சிகிச்சையால் புற்றைக் குணப்படுத்த முடியும். புற்று நோய்க்கான உயர்மட்ட சிகிச்சை மற்றும் வலிநிவாரண நடவடிக்கைகள் மூலம் தரமான வாழ்வை அளித்து வலியைக் குறைக்க முடியும்.

ஐந்து முக்கிய செய்திகள் (.சு.நி)

 1. கருப்பைவாய்ப் புற்றைத் தடுக்க முடியும்
 2. கருப்பைவாய் மாற்றங்களை (முன்புற்று) கண்டறிய சோதனைகள் உண்டு; இவற்றுக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் புற்றாக மாறும்.
 3. இந்த ஆரம்ப மாறுதல்களுக்கு பாதுகாப்பான சிறந்த சிகிச்சைகள் உள்ளன.
 4. 30-49 வயது பெண்கள் ஒருமுறையாவது கருப்பைவாய்ப் புற்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
 5. சிறுமியருக்கு கருப்பைவாய்ப் புற்றைத் தடுக்கும் தடுப்பு மருந்துகள் உள்ளன

குறிப்புகள்

a. www.who.int/immunization/diseases/hpv/en/

b. www.cancerfoundationofindia.org/meeting

c.apps.who.int/iris/bitstream/10665/144785/1/9789241548953

apps.who.int/iris/bitstream/10665/94830/1/9789241548694

www.who.int/mediacentre/factsheets/fs380/en/

 

 

 • PUBLISHED DATE : Oct 17, 2016
 • PUBLISHED BY : Zahid
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Oct 17, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.