குறுந்தலை

சிறிய தலையுடன் குழந்தை பிறப்பது அல்லது பிறப்புக்குப் பின் தலை வளரமல் போகும் நிலை குறுந்தலை என அழைக்கப்படுகிறது. ஒத்த வயதும் பாலினமும் கொண்ட குழந்தைகளோடு ஒப்பிடும் போது தலையின் அளவு சிறியதாக இருக்கும் பிறந்த குழந்தை உருவளர்ச்சிக் குறைவே குறுந்தலையாகும். குறுந்தலை தனியாகவோ அல்லது பிற பெரும் பிறப்புக் குறைபாடுகளோடு இணைந்தோ காணப்படும்.

உலக சுகாதார நிறுவனப் புள்ளி விவரப்படி இது பல்லாயிரம் குழந்தைகளுள் ஒன்றுக்குக் காணப்படும் அரிய நிலையாகும்.

மே 2015-ல் இருந்து குறுந்தலையோடு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாகப் பிரேசில் நாடு அறிவித்தது. 2000 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் முறையே குறுந்தலைப் பிறப்பு விகிதம் (உயிரோடு) முறையே 5.5/100000 மற்றும் 5.7/100000 என்று பிரேசில் உயிரோடு பிறக்கும் குழந்தைகள் பற்றிய தகவல் அமைப்பு முறை அறிவித்தது. 2015-ஆம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் இதுவே 99.7/100000 என உயர்ந்தது a.

இந்தியாவில் குறுந்தலை பாதிப்பைப் பற்றி அண்மையில் ஆய்வுகள் (இறந்து மற்றும் உயிரோடு பிறப்பது) நடத்தப்பட்டன. 97155 பிறப்புகளை ஆய்வு செய்ததில் குறுந்தலைப் பிறப்பு 2.30/10000 என காணப்பட்டது b.

குறுந்தலையோடு பிறக்கும் குழந்தைகளுக்குப் பெரும்பாலும் சரிவர உருவாகாத சிறிய மூளை காணப்படும். குழந்தை வளரும்போது வலிப்பு, உடல் மற்றும் கற்கும் குறைபாடுகள் தோன்றத் தொடங்கும்.

கரு வளர்ச்சியின் போது குறுந்தலையை அறிய குறிப்பிட்ட சோதனைகள் எதுவும் இல்லை. ஆனால் கருவுற்ற மூன்றாம் மும்மாதத்தில் கேளா ஒலிச் சோதனை இப்பிரச்சினையை அறிய பயன்படுத்தப்படுகிறது. பிறந்த உடல் தலைச் சுற்றளவை அளந்து உ.சு.நி. அளவுகோலோடு ஒப்பிட்டுப் பார்ப்பதும் தொடர்ந்து குழந்தைப் பருவத்தில் தலை வளர்ச்சியைக் கண்காணிப்பதுமே நம்பகரமான முறையாகும்.

குறிப்புகள்:

www.who.int/mediacentre/factsheets

www.cdc.gov/ncbddd/birthdefects/

www.cdc.gov/mmwr/volumes

www.who.int/emergencies/zika-virus

a. Soares de Araújo JS, et al. Microcephaly in northeast Brazil: a review of 16 208 births between 2012 and 2015 [Submitted]. Bull World Health Organ E-pub: 4 Feb 2016. doi: dx.doi.org/10.2471/BLT

b. Bhide P, Kar A. Birth prevalence of microcephaly in India. [Submitted]. Bull World Health Organ E-pub: 23 Feb 2016. doi: dx.doi.org/10.2471/BLT.

குறுந்தலைப் பாதிப்பை பொறுத்துக் குழந்தைகளுக்கு வெவ்வேறு வகையான அறிகுறிகள் காணப்படும். குறுந்தலை கொண்ட சில குழந்தைகள் இயல்பாகவே வளர்ந்து வருவர். சில குழந்தைகளுக்குப் பிறப்பில் எந்த அறிகுறியும் தென்படாது. ஆனால் காலம் செல்லச் செல்ல உருவாகும்:

 • வலிப்பு
 • வளர்ச்சி கட்டம் தாமதம் ஆகும் (தலைநிலைத்தல், உட்காருதல், நிற்றல், நடத்தல் போன்றவை)
 • உணவூட்டுவதில் சிரமம் (விழுங்குவதில் கடினம்)
 • பேச்சு சிரமம்
 • கற்றலில் சிரமம்
 • சமநிலை இன்மை
 • காது கேளாமை
 • பார்வைப் பிரச்சினைகள்

குறிப்புகள்

  www.who.int/mediacentre/factsheets

  www.cdc.gov/ncbddd/birthdefects

பிறந்த குழ்ந்தைகளுக்குப் பல காரணிகளால் குறுந்தலை ஏற்படுகிறது என்றாலும் காரணம் பொதுவாகத் தெரிவதில்லை. மிகவும் பொதுவான காரணங்கள் வருமாறு:

 • டவுண் நோய்த்தாக்கம் போன்ற மரபியல் கோளாறுகள்.
 • கர்ப்ப காலத்தில் ஏற்படும் டாக்சோபிளாஸ்மோசிஸ் (சமைக்கப்படாத உணவில் காணப்படும் ஒட்டுண்ணியால் ஏற்படும் நோய்), ரூபெல்லா, சிற்றக்கி, மேக நோய், சைட்டோமெகாலோவைரஸ் மற்றும் எச்.ஐ.வி. போன்ற தொற்றுக்கள்.
 • ஆர்ச்செனிக், பாதரசம், மது, கதிர்வீச்சு, புகைத்தல் ஆகியவற்றால் தாய் பாதிக்கப்படல்.
 • கருவளர்ச்சியின் போது கடுமையான ஊட்டச்சத்துக் குறைவு.
 • குழந்தையின் மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் பாதிப்பு.
 • கர்ப்ப காலத்தில் சிக்கா வைரசால் பாதிக்கப்பட்ட பெண்களின் குழந்தைகளுக்கு குறுந்தலை நோய் அதிகரித்துள்ளது. இதன் இரண்டிற்கும் இடையில் இருக்கும் தொடர்பை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

குறிப்புகள்:

 www.who.int/mediacentre/factsheets

கருவுற்ற காலத்தில்:

உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி கருவைக் கேளா ஒலி சோதனை செய்வதன் மூலம் குறுந்தலையைக் கண்டறிய முடியும். இரண்டாம் மும்மாதத்தின் இறுதியிலோ (28 வாரங்கள்) அல்லது மூன்றாம் மும்மாதத்திலோ கேளா ஒலி சோதனை செய்யப்படலாம்.

கருவுற்ற காலத்தில் இருக்க வேண்டிய சராசரிக்கு இரு தர விலகல் இருப்பதைக் கொண்டு குறுந்தலை என ஐயுறலாம்.

குழந்தை பிறப்புக்குப் பின்:

குழந்தை பிறந்து குறைந்த பட்சம் 24 மணி நேரத்தில் தலையின் சுற்றளவை அளந்து கர்ப்பக்கால வயது, பாலினம், எடை மற்றும் நீளத்தின் அடிப்படையில் உ.சு.நி. வளர்ச்சித் தர அளவோடு ஒப்பிட்டு நோக்க வேண்டும்.

குறுந்தலைக்கான அளவீட்டு மதிப்பு பொதுவாக சராசரியை விட இரு தர விலகல் (2SDs) குறைவாக இருக்கும். ஒத்த வயதும் பாலினமும் கொண்ட குழந்தைகளுக்கு இதுவே 3SD யாக இருந்தால் அது கடுமையான குறுந்தலை ஆகும்.

ஐயம் ஏற்பட்டால், ஒரு குழந்தை மருத்துவர் மீள் பார்வை செய்ய வேண்டும். சிடி, எம்.ஆர்.ஐ போன்ற மூளை பிம்ப ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். ஆரம்பக் கட்டக் குழந்தை வளர்ச்சியின் போது குறிப்பிட்ட இடைவெளிகளில் தலை அளவு எடுக்கப்பட்டு வளர்ச்சித் தர அளவுகளோடு ஒப்பிட்டு நோக்கப்பட வேண்டும்.

குறுந்தலைக்கான அறியப்பட்ட காரணங்களில் எதுவும் உள்ளனவா என்று மருத்துவர்கள் சோதித்துப் பார்க்க வேண்டும்.

குறிப்புகள்:

www.who.int/mediacentre/factsheets/

www.cdc.gov/ncbddd/birthdefects/

 • குறுந்தலைக்குக் குறிப்பிட்ட எந்த மருத்துவமும் இல்லை. வலிப்பு மற்றும் பிற அறிகுறிகளுக்கு சில வேலைகளில் சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும்.
 • குறுந்தலை கொண்ட குழந்தைகளை மதிப்பிட்டுப் பராமரிக்கப் பல துறையினர் அடங்கிய குழு உதவி செய்ய முடியும்.
 • குடும்ப ஆலோசனைகளும், பெற்றோருக்கு உளவியல் ஆதரவும் நோய் மேலாண்மையின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

குறிப்புகள்

www.who.int/mediacentre/factsheets

குறுந்தலையால் ஏற்படும் கோளாறுகள் அல்லது இரண்டாம் நிலைப் பாதிப்புகளே இந்நோயின் சிக்கல்கள் ஆகும். வளர்ச்சி தாமதம், பார்வை, கேட்டல், பேச்சுப் பிரச்சினைகள், வலிப்பு, கைகால் அசைப்பதில் சிரமம், உணவூட்டல் பிரச்சினை (சப்புதல், விழுங்குதலில் சிரமம்) ஆகியவையே பொதுவான சிக்கல்கள். பிறப்பின் போது சிறிய தலை என்பது மன வளர்ச்சி குன்றுதலோடு தொடர்புடையது.

குறிப்புகள்:

www.cdc.gov/ncbddd/birthdefects/microcephaly

www.healthline.com/symptom/microcephaly

குறிப்பிடத்தக்க எந்தத் தடுப்பு முறையும் இல்லை. ஆயினும் கருவளர்ச்சி காலத்தில் குறுமூளையை உருவாக்க்கும் சில காரணிகளைத் தடுக்கலாம்:

கருவுறுவதற்கு முன்:

 • குழந்தைப் பருவத்தில் ரூபெல்லா தடுப்பூசி (தட்டம்மை, அம்மைக்கட்டு ரூபெல்லா) இட்டிருக்கவில்லை என்றால் பெண்களுக்குக் (கருவுறும் முன்) அது அளிக்கப்பட வேண்டும்.
 • கர்ப்பமாகத் திட்டமிடும் பெண்கள் சில தொற்றுக்களை ( ரூபெல்லா, மேகநோய், டாக்சோபிளாஸ்மோசிஸ், சைட்டோமெகாலோவைரஸ், அக்கி) ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும்.
 • புகை, மது போன்ற நச்சுக்களை விலக்க வேண்டும்.
 • முன் கர்ப்பங்களில் குறுந்தலை இருந்திருந்தால் மரபியல் ஆலோசனை பெற வேண்டும்.
 • கொசு கடிப்பதன் மூலம் சிக்கா வைரஸ் பரவுவதைத் தடுக்கத் தனிநபர் காப்பு நடவடிக்கைகள்.
 • ·குறுந்தலை மற்றும் சிக்கா வைரஸ் பற்றிய பெண்களுக்கான மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

கர்ப்பகாலத்தில்:

 • ஊட்டச்சத்து, சில தொற்றுக்களுக்கான பரிசோதனையும் மேலாண்மையும், கருவளர்ச்சி பற்றிய தொடர் மதிப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கியப் பிறப்புக்கு முன்னான பராமரிப்பைத் தாய் பெற வேண்டும்.
 • கர்ப்பிணிகளும் கர்ப்பமுற விரும்புவோரும் கொசுக் கடியைத் தவிர்க்க அதிகக் கவனம் மேற்கொள்ள வேண்டும்:

o   டீட் (TEET) கொண்ட கொசு விரட்டியை வெளித்தெரியும் தோல் அல்லது துணிகளில் பூச வேண்டும்.

o   உடலை முடிந்த அளவில் முற்றிலுமாக மூடும் ஆடைகளை அணிதல்.

o   கொசு வலையின் கீழ் (பகலிலும்) உறங்குதல்.

o   சன்னல் கதவுகளில் கொசு தடுக்கும் வலைகள்.

o   சிக்கா, டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோயாளிகள் அவை பரவாமல் இருக்க மேற்கண்ட தனிநபர் காப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் (குறைந்த பட்சம் அறிகுறிகள் தோன்றிய முதல் வாரத்தில்).

o   உடலுறவு மூலம் சிக்கா வைரஸ் பரவுவதைத் தடுக்க கர்ப்பிணிகளின் இணையர்கள் (சிக்கா வைரஸ் பகுதிகளில் வாழ்பவர்கள் அல்லது அங்கிருந்து வருபவர்கள்) பாதுகாப்பு முறைகளைப் (காப்புறை) பின்பற்ற வேண்டும் அல்லது கர்ப்ப காலத்தில் உடலுறவைத் தவிர்க்க வேண்டும்.

o   சிறிதளவு தண்ணீரையே கொள்வதாக இருந்தாலும் (வாளி, பூச்சாடி, டயர்) கொசு பெருகும் இடங்களைக் கழுவி மூடி வைக்க வேண்டும்.

சிக்கா வைரஸ் பரவலுள்ள இடங்களில் வாழும் கர்ப்பிணிகளுக்காக உ.சு.நி. ஒரு தீர்மான அட்டவணையை 2 மார்ச்சு 2016 அன்று வெளியிட்டுள்ளது a.

பிறப்புக்குப் பின்:

 • பிறப்புக்குப் பின் உடல் மற்றும் கல்வித் திறன்களைக் குழந்தையிடம் வளர்க்க ஆரம்பத்திலேயே கவனம் செலுத்துதல்.
 • குறுந்தலைக் குழந்தைகள் உள்ள பெண்களுக்கும் குடும்பத்துக்கும் உளவியல் ஆதரவு b.

குறிப்புகள்:

a. Pregnancy management in the context of Zika virus- apps.who.int/iris/bitstream/

b.apps.who.int/iris/bitstream/

 • PUBLISHED DATE : Apr 27, 2016
 • PUBLISHED BY : Zahid
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Apr 27, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.