மனிதக் காம்புக்கட்டி வைரஸ் தொற்று & கருப்பைப் புற்று

மனிதக் காம்புக்கட்டி வைரஸ் தொற்றும் (எச்.பி.வி) கருப்பைவாய்ப் புற்றும் 

உலகு எங்கும் பரவலாகக் காணப்படும் ஒரு வைரஸ் தொகுதியே மனிதக் காம்புக்கட்டி வைரசுகள் (எச்.பி.வி). மருத்துவ ரீதியான புண்ணோடு அல்லது புண் இல்லாமல் பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்படும் பால்வினைத் தொற்றுக்களை உண்டாக்குவதே எச்.பி.வி. வைரஸ் a.

எச்.பி.வி. பால்வினைத் தொடர்பால் பரவும். இனப்பெருக்கப் பாதையின் பொதுவான வைரல் தொற்று இதுவே.

கருப்பைவாய்ப் புற்றே எச்.பி.வி. தொடர்புடைய நோய்களின் முக்கியப் பளுவாகும். கருப்பைவாய்ப் புற்றுக்கு முக்கியக் காரணமும், பிற ஆசனவாய்ப் பிறப்புறுப்பு புற்றுக்களுக்கும் (ஆசனவாய், கருவாய், யோனி மற்றும் ஆணுறுப்பு) தலை, கழுத்துப் புற்றுக்களுக்கு தொடர்புடைய காரணியும் எச்.பி.வி. தொற்றே என்பது நன்கு உறுதிசெய்யப்பட்டு விட்ட ஒன்றாகும். திரும்பத் திரும்ப ஏற்படும் இளையர் காம்புக்கட்டி நோய் (மூக்கு, வாயில் இருந்து நுரையீரல் வரை உள்ள காற்றுப்பாதையில் கட்டிகள் உருவாதல்) மற்றும் ஆண்களிலும் பெண்களிலும் உண்டாகும் இனப்பெருக்க உறுப்புக் கரணைகள் போன்ற பிற நோய்களுக்கும் எச்.பி.வி. யே காரணம் ஆகும். இனப்பெருக்க உறுப்புக் கரணைகள் பரவலாகக் காணப்படுகின்றன. இது கடுமையான தொற்று நோய் ஆகும்.

உலகம் முழுவதும் உள்ள பெண்களில் கருப்பைவாய்ப் புற்று நான்காவது பரவலாகக் காணப்படும் புற்று நோய் ஆகும். நன்கு வளர்ச்சி அடையாதப் பகுதிகளில் வாழும் பெண்களிடம் இது இரண்டாவது மிகவும் பரவலாகக் காணப்படும் புற்று நோய். உலகம் முழுவதும் 530000 புதிய கருப்பைவாய்ப் புற்று நோய் நேர்வுகளையும் (2012-ஆம் ஆண்டு) அவற்றில் குத்துமதிப்பாக 270000 மரணங்களையும் (புற்று நோயால் மரணம் அடையும் பெண்களில் 7.5%) உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது. இந்த மரணங்களில் 85%, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்ந்துள்ளன.

எச்.பி.வி. யால் உண்டாகும் புற்று நோய் மரணங்களில் 80% வளர்ந்து வரும் நாடுகளில் ஏற்படுகின்றன. அதிக அளவில் கருப்பைவாய்ப் புற்று கணிக்கப்பட்டுள்ள இடங்கள்: சகாரா சார் ஆப்பிரிக்கா, மெலனேசியா, லத்தின் அமெரிக்கா, கரீபியன், தென் - மத்திய ஆசியா மற்றும் தென் – கிழக்கு ஆசியா.

இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 43.68 கோடிப் பேர் உள்ளனர். இவர்கள்  கருப்பைவாய்ப் புற்று ஏற்படும் ஆபத்தில் உள்ளவர்கள். ஒவ்வொரு ஆண்டும் 122844 பெண்களுக்கு கருப்பைவாய்ப் புற்று இருப்பதாகக் கண்டறியப்படுகிறது. 67477 பேர் இந்நோயால் இறக்கின்றனர் (2012 ஆம் ஆண்டு கணிப்பு).இந்தியாவில் இதுவே பெண்கள் மத்தியில் அதிகமாக இருக்கும் புற்று நோய்களில் இரண்டாவது ஆகும். 15-44 வயதுடைய பெண்களிலும் இதுவே இரண்டாம் இடத்தில் இருக்கும் பரவலான புற்று நோய் ஆகும் b.ஒரு குறிப்பிட்ட கால அளவில், இந்தியாவில் நடத்தப்பெற்ற ஆய்வுகளில் (கருப்பை வாய் மாதிரிகளில் எச்.பி.வி. கண்டறிதல் சோதனை) பொதுவான பெண்கள் தொகையில் 5.0 %  பேருக்கு கருப்பைவாய் எச்.பி.வி. 16/18 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் 82.7% ஊடுறுவும் கருப்பைவாய்ப் புற்று எச்.பி.வி 16/18 இருப்பதைக் காட்டுகின்றன (விவரங்களை ICO HPV தகவல் மையம் மீள்பார்வையும் மீஆய்வும் செய்தளித்தது) b.

கருப்பைவாய்ப் புற்றுக்கான பிற நோய் விபரவியல் ஆபத்து காரணிகள் குறைந்த வயதில் திருமணம், பல உடலுறவு இணையர்கள், ஒரே பேற்றில் பலகுழந்தைகள், பிறப்புறுப்பு சுத்தம் இன்மை, ஊட்டச்சத்து இன்மை, வாய்வழி கருத்தடை மருந்துகள், விழிப்புணர்வு இன்மை ஆகியவையாகும்.

தெற்கு ஆசியாவில் இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் 22/100 000 பெண்களுக்குக் (ஓர் ஆண்டில்) கருப்பைப் புற்றுக்கள் ஏற்படுகின்றன (2012). வங்காள தேசத்தில் 19.2, ஸ்ரீலங்காவில் 13, ஈரானில் 2.8 நேர்வுகள் உண்டாகின்றன.

உலகம் முழுவதும் கருப்பைவாய்ப் புற்று நேர்வில் 70 % எச்.பி.வி. 16 மற்றும் 18 வகையால் ஏற்படுகின்றன. தடுப்பு மருந்துகள் உள்ளன. இதனால் கருப்பைவாய் மற்றும் பிற ஆசனவாய் பிறப்புறுப்பு புற்றுக்கள் தடுக்கப்படுகின்றன.

குறிப்புகள்:

a.nhp.gov.in/diseasesexually-transmitted-infections

b. hpvcentre.net/statistics/reports/IND.pdf (Human Papillomavirus and Related Diseases Report, India, ICO Information Centre on HPV and Cancer (HPV Information Centre) 2015)

who.int/bulletin/volumes/85/9/06-038414/en/

who.int/mediacentre/factsheets/fs380/en/

who.int/immunization/diseases/hpv/en/

பெரும்பாலன எச்.பி.வி. தொற்று, அறிகுறிகளை உண்டாக்குவதில்லை. உடலின் நோய்த்தடுப்பு மண்டலத்தால் தானாகவே குணமாகிறது. 90%-க்கு மேலான தொற்றுக்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் சரியாகிவிடும்.

இருப்பினும் நிலைத்திருக்கும் பிறப்புறுப்பு எச்.பி.வி. தொற்று (எச்.பி.வி.வகை 16 மற்றும் 18) புற்றுக்கு முன்னான புண்ணைக் கருப்பை வாயில் உருவாக்குகிறது. இவற்றிற்கு சிகிச்சை அளிக்காவிட்டால் அவை கருப்பைவாய்ப் புற்றாக மாறும்.

இயல்பான நோய்த்தடுப்பு மண்டலம் கொண்ட ஒரு பெண்ணில் அதி ஆபத்துள்ள எச்.பி.வி. தொடர் தொற்று கருப்பைவாய்ப் புற்றாக மாற 15-20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் ஆகும். எச்.ஐ.வி. தொற்றுக்கு சிகிச்சை அளிக்காதது போன்ற  பலவீனமான நோய்த்தடுப்பு மண்டலம் கொண்ட பெண்களுக்கு 5-10 ஆண்டுகளே போதுமானது.

புற்று நோய் முற்றிய கட்டத்திலேயே கருப்பை வாய்ப்புற்று அறிகுறிகள் தோன்றும்.

அறிகுறிகளாவன:

 • முறையற்ற, மாதவிடாய்க்கு இடைப்பட்ட அல்லது உடலுறவுக்குப் பின் அசாதாரண பிறப்புறுப்பு இரத்தக் கசிவு அல்லது மாதவிடாய் நின்றபின் குருதிக்கசிவு;
 • யோனியில் அசௌகரியம் அல்லது யோனியில் இருந்து துர்நாற்றமுள்ளக் கசிவு. இக்கசிவில் இரத்தம் இருக்கும். மாதவிடாய்க்கு இடையிலோ மாதவிடாய் நின்றபின்னோ இருக்கும்.
 • உடலுறவில் வலி;
 • முதுகு, கால் அல்லது இடுப்பு வலி;
 • களைப்பு, எடை இழப்பு, பசி இன்மை;
 • ஒரு கால் வீக்கம்.

கருப்பைவாய்ப் புற்றின் முற்றிய கட்டத்தில் கடுமையான அறிகுறிகள் தோன்றலாம்.

புற்று நோய் உண்டாக்காத எச்.பி.வி. வகைகள் (குறிப்பாக வகை 6 மற்றும் 11), பிறப்புறுப்புக் கரணை மற்றும் மூச்சுப்பாதைக் கட்டிகளையும் உருவாக்கலாம். இந்நிலைகளால் மரணம் நேராவிட்டாலும் அடிக்கடி நோய் ஏற்படுத்தக் கூடும். பிறப்புறுப்புக் கரணைகள் பரவலாகக் காணப்படும். இவை மிகவும் பரவக் கூடியவை.

குறிப்புகள்:

who.int/mediacentre/factsheets/fs380/en/

webmd.com/cancer/cervical-cancer/

எச்.பி.வி. வைரஸ் பேப்பிலோமாவைரிடே குடும்பத்தைச் சேர்ந்தது. அவை சிறிய, உறையற்ற டி.என்.ஏ. வைரசுகள். டி.என்.ஏ வரிசைப்படுத்தலுக்கு ஏற்ப அவை வகைப்படுத்தப் படுகின்றன. எச்.பி.வி.யில் 100-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. மரபணு வகை 16, 18, 31, 33, 35, 39, 45, 51, 52, 56, 58, 59 மற்றும்  66 ஆகியவற்றை உள்ளடக்கிய 13 வகைகள் புற்று நோயை உருவாக்குவன (அதிக ஆபத்து வகைகள்). பிறப்புறுப்புக் கரணைகளை உருவாக்குபவை இவற்றில் இருந்து வேறுபட்டன.

புற்றுநோய் எச்.பி.வி. தொற்று ஏற்பட்டு ஊடுறுவும் கருப்பைப்புற்று ஏற்பட 15-20 ஆண்டுகள் ஆகும். தடுப்பாற்றல் பலவீனமான பெண்களுக்கு, உதாரணமாக எச்.ஐ.வி. தொற்றுக்கு சிகிச்சை பெறாமல் இருப்பவர்களுக்கு 5-10 ஆண்டுகளிலேயே புற்று நோய் ஏற்படலாம்.

தொற்று ஏற்பட்டு சில மாதங்களில் சிகிச்சை இல்லாமலேயே எச்.பி.வி. தொற்று குணமடையும். இரண்டு வருடங்களுக்குள் 90% குணமடைந்து விடுகிறது. ஒரு சில வகை எச்.பி.வி.யின் ஒரு சிறு பகுதி புற்று நோயாக வளர்ச்சி அடைகிறது.

பரவும் முறை:

எச்.பி.வி. பால்வினையால் பரவுகிறது. உடலுறவு ஆரம்பித்த பின்னர் தொற்று உண்டாகிறது. ஊடுறுவும் உடலுறவு இல்லாமலேயே இனப்பெருக்க உறுப்புகளின் தோலுக்குத் தோல் தொடர்பே போதுமானது.

எச்.பி.வி. நிலைத்து இருப்பதற்கும் கருப்பைப்புற்று உருவாவதற்குமான ஆபத்துக் காரணிகள்-

 • ஆரம்ப முதல் உடல் உறவு
 • பல பால்வினை இணையர்
 • அதிக அளவில் சமச்சீரின்மை (குழந்தைப்பிறப்பில்)
 • இயக்குநீர் கருத்தடை மருந்துகளின் நீடித்தப் பயன்பாடு
 • புகையிலைப் பழக்கம்
 • தடுப்பாற்றல் அழுத்தப்படுதல் (உதாரணமாக, எச்.ஐ.வி. பாதிப்புள்ளவர்களுக்கு எச்.பி.வி. தொற்று ஏற்படும் ஆபத்து அதிகம். மேலும் பலவகையான எச்.பி.வி.வகைகளால் பாதிக்கப்படுவர்)
 • சமூகப்பொருளியல் நிலையில் தாழ்வு, சுகாதரக் குறைவு மற்றும் ஆண்டியாக்சிடண்ட் குறைவான உணவு.
 • கிளமைதியா டிராக்கோமேட்டிஸ் மற்றும் சிற்றக்கி வைரஸ் வகை-2 இணைத் தொற்று.

குறிப்புகள்:

who.int/mediacentre/factsheets

ncbi.nlm.nih.gov/pmc/articles/

cdc.gov/std/tg2015/hpv.htm

who.int/bulletin/volumes/

பெரும்பாலான எச்.பி.வி. தொற்றுக்களும் கருப்பைவாய்ப் புற்றும் ஆரம்பகால மருத்துவ அறிகுறிகளைக் காட்டுவதில்லை. முன்புற்றுப் புண்களும் ஆரம்பக் கட்ட புற்றும் பரிசோதனையில் கண்டறியப்படலாம். 30-49 வயதான ஒவ்வொரு பெண்களும் வாழ்நாளில் குறைந்த பட்சம் ஒரு முறையும் முடிந்த அளவில் அடிக்கடியும் உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் (உ.சு.நி.).

அமெரிக்க ஐக்கியநாடுகள் தடுப்புச்சேவை பணிப்படையும், அமெரிக்க புற்றுநோய் சங்கமும் 21-65 வயதுடைய பெண்கள் மூன்றாண்டுக்கு ஒருமுறை உடல்பரிசோதனை செய்துகொள்ள பரிந்துரைக்கின்றன (21 வயதுக்கு உட்பட்ட மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்குக் கருப்பைவாய்ப் புற்று வழக்கமான சோதனை பரிந்துரைக்கப்படவில்லை). பேப் சோதனையும் மனித காம்புக்கட்டி வைரஸ் சோதனையும் இணைத்துச் செய்யப்பட்டால் 30-65 வயதுடையப் பெண்களுக்கு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை இடைவெளி பரிந்துரைக்கப்படுகிறது.

கருப்பைவாய்ப் புற்று சோதனை:

மூன்று வெவ்வேறு வகையான பரிசோதனைகள் உள்ளன:

 • மரபான (பேப்) சோதனை மற்றும் பாய்ம அடிப்படைத் திசுவியல் ஆய்வு – சிகிச்சை அளிக்காவிட்டால் புற்றாக மாறும் வாய்ப்புள்ள அசாதாரண செல்களைக் கண்டறிய பேப் சோதனை பயன்படுத்தப்படுகிறது. மரபு ரீதியான பேப் சோதனையில், ஆய்வு மாதிரி ஒரு கண்ணாடி நுண்ணோக்கி வில்லையில் வைக்கப்பட்டு ஒரு நிலைநிறுத்தி சேர்க்கப்படுகிறது. ஒரு எந்திரமய பாய்ம அடிப்படை பேப் திசுவியல் சோதனையில், கருப்பைவாய் செல்கள் சேகரிக்கப்பட்டு  ஒரு பதப்படுத்தி உள்ள சிறு புட்டியில் வைக்கப்படுகிறது. பாய்ம அடிப்படை சோதனை மூலம் ஒரே மாதிரி அதி ஆபத்து எச்.பி.வி.வகைகளையும் சோதித்து அறியலாம். இம்முறை பேப் மற்றும் எச்.பி.வி. இணை சோதனை எனப்படும்.
 • அசெட்டிக் அமிலத்துடன் பார்வை மூலம் சோதனை – கருப்பைவாயில் அசெட்டிக் அமிலத்தைத் தடவி அசாதாராண பகுதிகள் வெள்ளையாவதன் மூலம் நோய் கண்டறியலாம். இயல்பற்ற இடத்தில் இருந்து அகற்றப்பட்ட திசு, வளர்ச்சி சோதனை மூலம் ஆய்வு செய்யப்படும்.
 • அதி ஆபத்து எச்.பி.வி. வகை சோதனை- கருப்பைவாய் செல்களில் அதி ஆபத்து வகை இருப்பதை இதன் மூலம் கண்டறியலாம்.

குறிப்புகள்:

cancer.gov/types/cervical/pap-hpv-

who.int/mediacentre/factsheets/

acog.org/~/media/districts/district

பரிசோதனையில் இயல்பற்ற செல்கள் அல்லது புண்கள் காணப்பட்டால் அவற்றை அகற்ற சிகிச்சை தேவைப்படும். இதில் உறைவுசிகிச்சை (கருப்பை வாயில் உள்ள அசாதாரண திசுக்கள் உறைதல் மூலம் அழிக்கப்படும்) அல்லது உறைவு சிகிச்சைக்கு நோயாளி தகுதியாக இல்லை எனில் மின்கண்ணி வெட்டறுவை முறை (LEEP) ஆகியவை அடங்கும்.

கருப்பைவாய் புற்றின் அறிகுறிகள் இருந்தால் அறுவை, கதிர்சிகிச்சை அல்லது வேதியற்சிகிச்சை அளிக்கப்படும்.

குறிப்புகள்:

apps.who.int/iris/bitstream/

எச்.பி.வி. தொற்றின் சிக்கல்கள்-

 • கருப்பைவாய்ப் புற்று
 • பிற ஆசனவாய் இனப்பெருக்க உறுப்பு புற்றுக்கள் (ஆசனவாய், கருவாய், யோனி, மற்றும் ஆணுறுப்பு)
 • தலை மற்றும் கழுத்துப் புற்று
 • தொடர்ந்துவரும் இளம்பருவ சுவாசமண்டலக் காம்புக்கட்டி நோய்
 • இனப்பெருக்க உறுப்புக் கரணைகள்

குறிப்புகள்

who.int/mediacentre/factsheets/

கருப்பைவாய்ப் புற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல்: ஒரு விரிவான அணுகுமுறை:

கருப்பைவாய்ப் புற்றைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும்: ஒரு விரிவான அணுகுமுறையை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. இந்த விரிவான அணுகுமுறை சமுதாயக் கல்வி, சமூக அணிதிரட்டல், தடுப்பு மருந்து, பரிசோதனை, மருத்துவம் மற்றும் வலிநிவாரணம் ஆகியவற்றின்  கூறுகளை உள்ளடக்கிய பல்துறை அணுகுமுறையாக இருக்க வேண்டும்.

9-13 வயதுப் பெண்குழந்தைகள் பால்வினைகளில் ஈடுபடும் முன்னரே எச்.பி.வி. தடுப்பூசி அளிப்பதே முதன்மைத் தடுப்பு முறையாகும்.

இரண்டு தடுப்பூசிகள் இருக்கின்றன – இருவலு மற்றும் நான்குவலு தடுப்பூசி.

நான்குவலு தடுப்பூசி, 70% கருப்பைவாய்ப் புற்றுக்குக் காரணமான எச்.பி.வி. வகைகள் 16 மற்றும் 18 தொற்றுக்கு எதிராகப் பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் இது இனப்பெருக்க உருப்புக் கரணைகளை உருவாக்கும் எச்.பி.வி. வகை 6 மற்றும் 11 க்கு எதிராகவும் பாதுகாப்பு அளிக்கிறது.

தடுப்பூசி பெறுபவரைப் பொறுத்து தடுப்பூசி அட்டவணை அமைகிறது. உலக சுகாதார நிறுவனம் (மார்ச், 2016) a இரு எச்.பி.வி. தடுப்பூசிகளுக்கும் அட்டவணைகளைப் பரிந்துரைத்துள்ளது:

 • முதல் வேளை, மருந்தளிக்கும் போது 15 வயதுக்குக் கீழ் இருக்கும் பெண்களுக்கு: 2-வேளை அட்டவணை (0,6 மாதங்கள்) பரிந்துரைக்கப்படுகின்றன (இரு வேளை மருந்துகளுக்கும் இடையில் இடைவெளி 5 மாதங்களுக்கும் குறைவாக இருந்தால் மூன்றாவது வேளை மருந்தை முதல் வேளைக்குக் குறைந்த பட்சம் 6 மாதம் கழித்து அளிக்க வேண்டும்).
 • முதல் வேளை மருந்தின் போது 15 வயது அல்லது அதற்கு மேல் உள்ள பெண்களுக்கு: 3 வேளை மருந்து (0, 1-2, 6 மாதங்கள்) பரிந்துரைக்கப் படுகின்றது.
 • நோய்த்தடுப்பாற்றல் குறைவு பட்டோர் மற்றும்/அல்லது எச்.ஐ.வி. தொற்று உள்ளவர்களுக்கு 3 வேளை அட்டவணை பரிந்துரைக்கப்படுகிறது.

சில நாடுகளில் பிறப்புறுப்புப் புற்று மற்றும் பிறப்புறுப்புக் கரணையைத் தடுக்க ஆண் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி இடப்படுகிறது.

120 நாடுகளில் உரிமம் பெற்றுள்ள இரு தடுப்பூசிகள் இந்திய மருந்து பொது கட்டுப்பாட்டாளரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு இந்தியாவிலும் கிடைக்கின்றன. 63 நாடுகள் பெண் பிள்ளைகளுக்கான எச்.பி.வி. தடுப்பூசியைத் தேசிய தடுப்புமருந்து திட்டத்தில் இணைத்துள்ளன. இந்தியக் குழந்தைமருத்துவர் கழகம், இந்திய மகப்பேறு மற்றும் பெண்மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (FOGSI), இந்தியப் புற்றுநோய் அமைப்பு b ஆகியவை பெண் குழந்தைகளுக்கு எச்.பி.வி. தடுப்பூசியைப் பரிந்துரைக்கின்றன.

பெண் மற்றும் ஆண் இளம் பருவத்தினருக்குப் பரிந்துரைக்கப்படும் பிற தடுப்பு முறைகளாவன:

 • பாதுகாப்பான பால்வினை (காலம் தாழ்த்தி தொடங்குவது உட்பட)
 • பால்வினையில் ஈடுபடத் தொடங்கி விட்டவர்களுக்குக் காப்புறைகளை ஊக்கப்படுத்தி வழங்குதல்.
 • கருப்பைவாய் மற்றும் பிற புற்று நோய்களுக்கு ஆபத்துக் காரணியாக விளங்கும் புகையிலையைக் (பொதுவாக இளம்வயதில் தொடங்கும்) குறித்து எச்சரிக்கை.
 • ஆணுறுப்பு நுனித்தோல் அகற்றல்.

ஆணுறுப்பு நுனித்தோல் அகற்றலும் காப்புறை பயன்பாடும் எச்.பி.வி. பரவலைக் குறிப்பிடத் தக்க வகையில் தடுக்கின்றன.

இரண்டாம் நிலைத் தடுப்பு- பரிசோதனையும் மருத்துவமும் இதில் அடக்கம்.

பெண்களுக்கான வழக்கமான சுகாதாரப் பராமரிப்பில் கருவாய்ப் புற்றுப் பரிசோதனை முக்கியமான பகுதியாகும். முற்றிலும் ஆரோக்கியமாக இருப்பதாக உணர்பவர்களுக்கும் அறிகுறிகள் எதுவும் காணப்படாதவர்களுக்கும் இருக்கக் கூடிய முன்புற்று மற்றும் புற்று நோயை இதனால் கண்டறியலாம். ஆரம்பத்தில் கண்டறிவதால் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்க முடியும் என்பது பரிசோதனையின் மூலம் கிடைக்கும் அனுகூலம் ஆகும்.

பால்வினை நடவடிக்கைகளில் தீவிரமாக இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு பரிசோதனை அவசியம்.

அமெரிக்க ஐக்கியநாடுகள் தடுப்புச்சேவைப் பணிப்படையும், அமெரிக்க புற்றுநோய்ச் சங்கமும் 21-65 வயதுடைய பெண்கள் மூன்றாண்டுக்கு ஒருமுறை உடல்பரிசோதனை செய்துகொள்ள பரிந்துரைக்கின்றன (21 வயதுக்கு உட்பட்ட மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வழக்கமான கருப்பைவாய்ப் புற்று சோதனை பரிந்துரைக்கப்படவில்லை). பேப் சோதனையும் மனித காம்புக்கட்டி வைரஸ் சோதனையும் இணைத்துச் செய்யப்பட்டால் 30-65 வயதுடையப் பெண்களுக்கு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை இடைவெளி பரிந்துரைக்கப்படுகிறது.

உலக அளவில் கருப்பைவாய்ப் புற்று மரண விகிதம் அதிகம் ஆகும் (52%). பரிசோதனை மற்றும் மருத்துவத்தால் இதைக் குறைக்க முடியும். உ.சு.நி. இதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது c.

குறிப்புகள்:

a. who.int/immunization/diseases/hpv/en/

b. cancerfoundationofindia.org/meetingssymposium/pdf/

c.apps.who.int/iris/bitstream/eng.pdf

   who.int/mediacentre/factsheets/fs380/en/

  hpvcentre.net/statistics/reports/IND.pdf

 • PUBLISHED DATE : Apr 26, 2016
 • PUBLISHED BY : Zahid
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Apr 26, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.