யாஸ்

யாஸ் ஒரு நீடித்தத் தொற்று நோய். இது பால்வினை நோய் அல்ல. டிரப்போநீம்களால் ஏற்படும் நீடித்த பாக்டீரியா தொற்று நோய்த் தொகுதியில் (ஓரிட டிரப்போநெமட்டோசஸ், பால்வினை நோயல்லாத சுருளுயிரி நோய்) ஒன்று. இத்தொகுதியில் அடங்கும் பிற நோய்கள் ஓரிட மேக நோய் மற்றும் பின்டா நோய் ஆகும். இவற்றில் யாஸ் நோயே மிகவும் பரவலானது. இது பொதுவாக ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்கா, காரிபீயன், தீபகற்ப இந்தியா மற்றும் தென்கிழக்கு நிலநடுக்கோட்டு தீவுகளின் வெதுவெதுப்பான, ஈரப்பதமான மற்றும் வெப்பமண்டலப் பகுதிகளில் முக்கியமாகக் காணப்படும்.

டிரப்போநிமா பல்லிடம் பாக்டீரியாவின் சார் இனமான பெர்ட்டென்யூவால் யாஸ் நோய் ஏற்படுகிறது. யாஸ் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய் அல்ல. ஆனால் முகம் அல்லது அவயவங்களில் ஊனத்தையும் வெளிப்படையான உருக்குலைவையும் ஏற்படுத்துவதால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தால் ஒதுக்கப்படவும் பாரபட்சத்துக்கு ஆளாகவும் நேரிடும். இந்நோய் தோல், எலும்பு மற்றும் குருத்தெலும்பைப் பாதிக்கிறது. சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் மூக்கு மற்றும் கால் எலும்புகளின் உருக்குலைவுக்கு வழிவகுக்கும். இருப்பினும், நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளால் இதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும்.

இந்தியாவில் எந்த ஒரு பகுதியிலும், அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள இனக்குழு மக்களின் பெயராலேயே இந்நோய் அழைக்கப்படுகிறது. உதாரணமாக சத்திஸ்கரின் பஸ்தர் பகுதியில் இது ‘மதிய ரோகா’ என்றும் மகாராஷ்ட்டிராவின் சிரோஞ்சாவில் ‘கொண்டி ரோகா’ என்றும், ஆந்திராவிலும் ஒடிசாவிலும் ‘கோயா ரோகா’ என்றும் அழைக்கப்படுகிறது. அசாமில் அத்திக்காய் போன்ற கொப்புளங்கள் கொண்ட ’தொமரு காகு’ நோயின் மருத்துவ அம்சங்களும் யாஸ் நோயைப் போன்றே உள்ளன. மத்திய இந்தியாவிலும், உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளிலும் நீடித்தப் புண்களுக்கு சக்கவார் என்ற பெயர் விளங்குகிறது.

சத்திகார், ஒடிசா, ஆந்திரா மற்றும் மகாராஷ்ட்டிரா மாநிலங்களில் மலைச்சாதி மக்கள் வாழும் பகுதிகளில் இந்நோய் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, அசாம், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களிலும் இந்நோய் இருப்பைப் பற்றிய அறிவிப்புகள் உள்ளன.

2003-ஆம் ஆண்டில் இருந்து இந்நோயின் புதிய நேர்வுகள் அறிவிக்கப்படவில்லை. ஆதலால் இந்தியாவில் இந்நோய் ஒழிக்கப்பட்டது என 2006-ல் அறிவிக்கப்பட்டது. மனிதர்களுக்கு மட்டுமே இந்நோய் இருப்பதால் இதை ஒழித்துவிட முடியும் என்றே உலகச் சுகாதார நிறுவனம் பலகாலமாகக் கருதிவருகிறது.

இத்தொற்று மனிதரில் மட்டுமே இருப்பதால் இந்தியாவில் இதை ஒழிப்பது சாத்தியமே. நீடித்துப் பலன் அளிக்கும் ஒரு வேளை பென்சிலின் ஊசி பலன் தருவதாகும். மேலும் இந்த நோய் ஒரு சில குறிப்பட்ட பகுதிகளிலேயே உள்ளது. 2003-ற்குப் பின் நேர்வுகள் அறிவிக்கப்பட வில்லை.

குறிப்புகள்:

http://www.who.int/mediacentre/factsheets/fs316/en/

http://www.ncdc.gov.in/index3.asp?sslid=330&subsublinkid=313

யாஸ் நோய்க்கு இரு அடிப்படைக் கட்டங்கள் உள்ளன: ஆரம்பக் கட்டம் (தொற்றும்) மற்றும் பிந்திய கட்டம் (தொற்றாத).

ஆரம்ப கட்ட யாசில், பாக்டீரியா நுழைந்த இடத்தில், காம்புக்கட்டி ஒன்று உருவகும். இந்தக் கட்டிக்குள் நுண்ணுயிரிகள் நிறைந்திருக்கும். 3-6 மாதங்கள் நிலைத்திருக்கும் இக்கட்டி இயற்கையாகவே ஆறிவிடும். இரவுநேர எலும்புவலி மற்றும் எலும்புப்புண்கள் ஆரம்ப கட்டத்தில் ஏற்படலாம். நோய் பரவும் இடங்களில் ஆரம்ப கட்டத் தோல் புண்கள் குழந்தைகளுக்கும் இளம்வயதினருக்கும் பொதுவாக ஏற்படுகிறது.

ஆரம்பத் தொற்றிற்கு 5 ஆண்டுகள் கழித்து பிந்திய கட்ட யாஸ் ஏற்படுகிறது. மூக்கு மற்றும் எலும்புச் சிதைவு, உள்ளங்கை, உள்ளங்கால் வெடிப்பு ஆகியவை நோய் இயல்புகள். உள்ளங்காலில் ஏற்படும் இச்சிக்கலால் நோயாளிக்கு நடப்பதில் சிரமம் உண்டாகும். பிந்திய கட்ட யாஸ் தொற்று நோயல்ல. ஆனால் ஒருவரை ஊனமாக்கக் கூடியது.

குறிப்புகள்:

http://www.who.int/mediacentre/factsheets/fs316/en/

http://www.ncdc.gov.in/index3.asp?sslid=330&subsublinkid=313

Yaws recognition booklet for communities, WHO. Available at

http://apps.who.int/iris/bitstream/10665/75360/1/9789241504096_eng.pdf?ua=1

http://emedicine.medscape.com/article/1053612-clinical

டிரிபோனிமா பெர்ட்டென்யூ என்ற டி.பல்லிடியூம் பாக்டீரியாவை மிகவும் ஒத்த ஒரு பாக்டீரியாவால் யாஸ் நோய் உண்டாகிறது. இது ஒரு மெல்லிய சுருளுயிரி. மேகநோயை உண்டாக்கும் டி.பல்லிடியூம் பாக்டீரியாவில் இருந்து இதை ஊனீரியல் முறையில் பிரித்தறிய முடியாது. புண்கள், நிணநீர்ச் சுரப்பிகள், மண்ணீரல் மற்றும் எலும்பு மச்சைகளில் இந்தப் பாக்டீரியாக்கள் காணப்படும்.

தொற்றுயிரிப் புகலிடம்: யாஸ் கிருமிகளின் புகலிடம் அறிந்த வரையில் மனிதன் மட்டுமே. முதல் 5 ஆண்டுகளில் புண்கள் 2-3 தடவை ஆறியும் குணமாகியும் புதிய தொற்றுக்கு மூல ஆதாரமாக விளங்குகின்றன. ஒரு தொற்று ஏற்பட்டுள்ள இடத்தைச் சுற்றி கொத்தாக அமைந்திருக்கும் இடங்களே உள்ளுறையும் தொற்றின் இருப்பிடம் ஆகும். உள்ளுறையும் இடங்களில் அடிக்கடி ஆறித் தோன்றும் நிலை காணப்படும்.

பரவல்- யாஸ் மனிதருக்கு மனிதர் நேரடியாக (உடலுறவு மூலம் அல்ல) புண்ணில் உள்ள பாய்மம் மூலமாக சிறு காயங்கள் வழியாகப் பரவுகிறது. ஆரம்பக்கட்டப் புண்களில் பாக்டீரியாக்கள் நிரம்பி இருக்கின்றன. நோயரும்பும் காலம் 9-90 நாட்கள் (சராசரி 21 நாட்கள்).

பாதிக்கப்படுவோரில் 75% பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளே (6-10 வயதுக்குட்பட்ட குழந்தைகளே அதிகபட்சம்). ஆண்களும் பெண்களும் சம்மாகப் பாதிக்கப்படுகின்றனர்.

மிகையான கூட்ட நெரிசல், மோசமான சுகாதாரநிலை, குறைந்த சமூகப் பொருளாதார நிலை ஆகியவை யாஸ் பரவ அனுகூலமாக உள்ளன.

குறிப்புகள்:

http://www.who.int/yaws/en

http://www.who.int/mediacentre/factsheets/fs316/en/

http://www.ncdc.gov.in/index3.asp?sslid=330&subsublinkid=313

சொறிசிரங்கு, சிரங்கு, தோல் காசநோய், படை, வெப்பமண்டலப் புண்கள், தொழுநோய் மற்றும் யானைச்சொறி புண்களை யாஸ் தூண்டுகிறது. இவற்றோடும் யாஸ் நோய் ஏற்படும். பென்சிலின் சிகிச்சையால் யாஸ் நோய் அற்புதமாக மறைகிறது. ஆனால் பிற தோல் நோய் குணாமாகாது. இதன்மூலம் யாசை வேறுபடுத்திக் கண்டறியலாம்.

தொற்றுப் புண்ணைச் சுற்றி ஒரு தொகுதியாக உள்ளுறை மற்றும் நோயரும்பும் நேர்வுகள் காணப்படும். மேல் தோல் சோதனையில் இதைத் கண்டறியலாம்.

ஊனீரியல்-

தரமான ஆய்வக-அடிப்படையிலான சோதனைகள்:

டிரிப்போனிமல் தொற்றுக்களை (உ-ம்: மேகநோய் மற்றும் யாஸ்) கண்டறிய ஊனீரியல் சோதனைகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஊனீர்சோதனையைக் கொண்டு யாஸ் மற்றும் மேக நோய்களுக்கு இடையில் வேறுபாடு காண முடியாது. ஓரிட நோய்த்தாக்கம் உள்ள இடங்களில் பெரியவர்களுக்கு  மருத்துவ ரீதியான மேற்தோல் ஆய்வு தேவைப்படும்.

பொதுவாகப் பயன்படுத்தப்படும் சோதனைகளான பால்வினை நோய் ஆய்வகச் சோதனையும் (VDRL) ரேப்பிட் பிளாஸ்மா ரீஜின் சோதனையும் (RPR) மலிவானவைகளும், நடத்துவதற்கு விரைவானவையும், எளிமையானவையும் ஆகும். நோய் ஏற்பட்டு ஊனீர் நேர்மறை முடிவைப் பெற நீடித்த காலம் ஆகும் ஆதலால் முதல் சோதனை ஊனீர் எதிர்மறையாக இருக்கலாம்.

துரித பராமரிப்பிட சோதனை (நோயாளிப் பராமரிப்பு இடத்திலேயே மருத்துவ சோதனை) துரித சோதனைகள் மூலம் பராமரிப்பு இடத்திலேயே நோய்கண்டறிந்து மருத்துவம் அளிக்க முடியும். இரு வகை துரித சோதனைகள் உள்ளன:

மேகநோயைக் கண்டறிய துரித டிரப்போனிமல் சோதனைகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆயினும் இச்சோதனைகளால் தற்போதைய வினையாற்றும் யாசில் இருந்து முன்னர் ஏற்பட்டத் தொற்றை வேறுபடுத்திக் காண முடியாது. ஆகவே இதை மட்டுமே பயன்படுத்தினால் நோயாளிகளுக்கு மிகையான சிகிச்சை அளிக்கவும் நேர்வுகளைப் பற்றி மிகையாக அறிவிக்கவும் நேரிடலாம்.

புதிய இரட்டைத் துரித பராமரிப்பிட மேகநோய் சோதனை மூலம் (டிரிப்போனிமல் அல்லாதது மற்றும் டிரிப்போனிமல்) ஒரே நேரத்தில் ஆனால் இரு எதிர்பொருளையும் தனித்தனியாகக் கண்டறிய முடியும். இது இப்போது யாஸ் ஒழிப்பு முயற்சிகளில் பயன்படுத்தப்படுகிறது.

பாலிமரேஸ் தொடர் மறுவினை  (PCR) இச்சோதனையைப் பயன்படுத்தி மரபிழையியல் ஆய்வு செய்வதன் மூலம் யாசை உறுதி செய்ய முடியும். நோயொழிப்பு திட்டத்தின் இறுதிக் கட்டத்தில் இது மிகவும் உதவியாக இருக்கும். யாஸ் புண்களில் இருந்து எடுக்கப்பட்ட பஞ்சுக்குச்சி மாதிரிகளில் அசித்ரோமைசின் எதிர்ப்பைத் தீர்மானிக்கவும் இச்சோதனையைப் பயன்படுத்தலாம்.

குறிப்புகள்:

http://www.who.int/mediacentre/factsheets/fs316/en/

http://www.ncdc.gov.in/index3.asp?sslid=330&subsublinkid=313

யாஸ் சிகிச்சைக்கு இரண்டு நுண்ணுயிர்க்கொல்லிகளை உலகச்சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. யாஸ் அறிகுறிகள் இருக்குமானால் அருகில் உள்ள அரசு சுகாதார மையங்களில் உறுதிப்படுத்தி சிகிச்சை பெற வேண்டும். இந்தியாவில் இறுதி நேர்வு ஏற்பட்டு 3 ஆண்டுகள் கழித்து செப்டம்பர் 2006-ல் யாஸ் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டு அதற்கான தொடர் பணிகள் நடைபெறுகின்றன.

யாஸ் ஒழிப்புத் திட்டத்தின் நோக்கங்கள்: (i) அதிகத் தரம் வாய்ந்த தேடல்களைத் தனித்த மதிப்பீடுகளின் மூலம் உறுதி செய்து யாஸ் இல்லை என்று அறிவிப்பதே யாஸ் ஒழிப்பு என்பதன் வரையறையாகும். (ii) தொடர்ந்து மூன்று ஆண்டுகள் புதிய நேர்வுகள் இல்லாமல் இருப்பதை 1-5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஊனீர் மதிப்பாய்வு செய்து நோய் பரவல் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதுமே யாஸ் ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதன் வரையறை.

குறிப்புகள்:

http://www.who.int/mediacentre/factsheets/fs316/en/

http://www.ncdc.gov.in/index3.asp?sslid=330&subsublinkid=313

http://www.who.int/mediacentre/factsheets/fs316/en/

பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிக்காவிட்டால் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் கால் மற்றும் மூக்கில் உருக்குலைவுகள் உருவாகும். இந்நோயினாலும் அதன் சிக்கலாலும் பள்ளிகளில் வருகைக் குறைவும் விவசாய நடவடிக்கைகளில் பாதிப்பும் ஏற்படுகின்றன.

குறிப்பு:

http://www.who.int/mediacentre/factsheets/fs316/en/

 • யாசுக்கு தடுப்பு மருந்தில்லை.
 • ஆரம்பக் கட்டத்தில் நோயைக் கண்டறிந்து தனிநபர் மற்றும் மக்கள் கூட்டங்களுக்கு சிகிச்சை அளித்தும், பாதிக்கப்பட்ட மக்கள் அல்லது சமுதாயங்களை இலக்காக வைத்து மருத்துவம் அளித்தும் பரவலைத் தடுப்பதிலேயே தடுப்புமுறை அமைந்துள்ளது.
 • சுகாதாரக் கல்வியும் தனிநபர் சுத்தமுமே தடுப்பு முறையின் முக்கியக் கூறுகள் ஆகும்.

இந்தியாவில் யாஸ் ஒழிப்புத் திட்டம்: இந்தியாவில் 1996-ல் இத்திட்டம் தொடங்கப்பட்டது. திட்ட உத்தியில் அடங்குவன: (1) மனிதவள மேம்பாடு (2) நேர்வு கண்டறிதல் (பயிற்சி பெற்றத் துணை சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று உறுதிப்படுத்துதல்) (3) பாதிக்கப் பட்டவர்களுக்கும் அவர்களோடு தொடர்புடையவர்களுக்கும் ஒரே நேரத்தில் சிகிச்சை (4) பல் துறை அணுகுமுறையைப் பயன்படுத்தி (மலை சாதியினர் வளர்ச்சித் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவைகள்  (ICDS), பஞ்சாயத்து அமைப்புகள், வனத்துறை, கல்வித்துறை ஆகிய துறைகளுக்கும் சுகாதாரத் துறைக்கும் இடையில் ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும்) தகவல், கல்வி மற்றும் தொடர்புச் செயல்பாடுகள். யாஸ் நேர்வுகள் அறிவிக்கப்பட்ட 10 மாநிலங்களில் இருந்து 51 மாவட்டங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

1996-ல் இருந்து நேர்வுகள் குறைந்து வந்தன. இறுதி நோய் நேர்வு 2003-ல் அறிவிக்கப்பட்டது. 2003-க்குப் பின் புதிய நேர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. செப்டம்பர் 19, 2006-ல் யாஸ் நோய் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்டு விட்டதாக இந்திய அரசு முறையாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து மூன்று செயல்பாடுகள் ஊக்கப்படுத்தப்பட்டன. பரவல் இல்லை என்பதை உறுதிப்படுத்த சிறுவர்களிடையே கணக்காய்வு செய்தல்; நோய் வதந்திகளை ஆய்வு செய்தல்; தன்னார்வமாக அறிவிப்போர்க்கு பரிசுகள்: உறுதியான நேர்வுக்கு ரூபாய் 5000 மற்றும் உறுதியான நேர்வை முதலில் அறிவித்தவருக்கு ரூபாய் 500.

வினைபுரியும் நேர்வைத் தேடுதல், வழக்கமான அறிவிப்பு, பயிற்சி மற்றும் தகவல், கல்வி, தொடர்பு ஆகிய ஆரம்ப கட்டத் திட்டங்களைத் தொடர்ந்து நடத்துமாறு வல்லுநர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.

இனங்காணப்பட்டக் கிராமங்களில் எல்லாம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு (2009-2011) தேசிய நோய்க்கட்டுப்பாட்டு மையம் மாநில சுகாதார இயக்ககங்களுடன் இணைந்து ஊனீர் மதிப்பாய்வை நடத்தியது. சேகரிக்கப்பட்ட மாதிரிகள் எல்லாம் யாஸ் நோய்க்கு எதிர்மறை முடிவையே காட்டின. இத்திட்டத்தின் நடவடிக்கை வல்லுநர்கள் அடங்கிய சுதந்திரமான மதிப்பீட்டுக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டன.

திட்ட வழிகாட்டுதலின் படி, வினைபுரியும் யாஸ் நேர்வு தேடல்கள் மேற்கொள்ளப்பட்டன. 2003 –ற்குப் பின் இத்தேடலின் போது ஒரு உறுதிசெய்யப்பட்ட யாஸ் நேர்வும் கண்டறியப்படவில்லை. ஜூலை 2014-ல் நடந்த இறுதிப் பணிப்படைக் கூட்டம், உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து யாஸ் ஒழிக்கப்பட்டதென சான்றிதழ் பெறும் நடவடிக்கையைத் தொடங்குமாறு பரிந்துரைத்தது.

2012-ல் நுண்ணுயிர்க்கொல்லியான அசித்திரோமைசினின் ஒரு நேர வாய்வழி மருந்து யாஸ் நோயை முற்றிலும் குணப்படுத்தும் என்ற கண்டுபிடிப்பே யாஸ் நோய் ஒழிப்பில் வெற்றியை வழங்கியது. 1912-ல் வெளியிடப்பட்ட புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் பற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டி 2020-ல் யாசை ஒழிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.

நினைவில் வைக்கவேண்டிய முக்கிய கருத்துக்கள்:  

 • ஒரு நேர வாய்வழி அசித்திரோமைசினால் யாசைக் குணப்படுத்தலாம்.
 • மனிதர்க்கு மனிதர் நேரடித் தொடர்பால் இந்நோய் பரவுகிறது
 • பொதுவாகக் குழந்தைகள் இணைந்து விளையாடுவதால் அவர்களைப் பெரும்பாலும் இந்நோய் பாதிக்கிறது.
 • மருத்துவம் அளிக்காவிட்டால் இந்நோய் நீடித்த உடல்சீர்குலைவையும் ஊனத்தையும் ஏற்படுத்தும்.
 • ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தின் அமெரிக்கா, பசிபிக் நாடுகளின் கிராமப்புற ஏழை சமுதாயங்களில் யாஸ் பாதிப்பு உள்ளது.

குறிப்புகள்:

Jain SK, Thomas TG, Bora D, Venkatesh S, Eradicating Yaws from India: A Summary , J. Commun. Dis. 2014; 46(3): 1- 9.Available from

http://www.ncdc.gov.in/writereaddata/linkimages/

Narain JP, Jain SK, Bora D, Venkatesh S, Eradicating successfully yaws from India: The strategy & global lessons. Indian J Med Res, 2015 May; 141(5):608-613.Available from http://www.icmr.nic.in/ijmr/2015/may/0514.pdf accessed on 19th November 2015.

http://www.who.int/yaws/epidemiology/en/

http://www.who.int/yaws/2013_Yaws_seminar_Lancet.pdf

http://www.who.int/neglected_diseases/yaws_azithromycin_2012/en/

http://www.who.int/wer/2015/wer9016.pdf

 • PUBLISHED DATE : Feb 11, 2016
 • PUBLISHED BY : Zahid
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Feb 11, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.